ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அமைக்கப்பட்ட கூடாரம் தான் டிடிவி தினகரன் அணி என ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் யார் என இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், துணைப்பொதுச் செயலாளர் என்ற முறையில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு சென்று பணியாற்றுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். அவர் வழங்கிய காலக்கெடு முடிவடைவதால், இரு அணிகளும் இணையுமா என்று கேள்வி எழுந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு அணிகளும் இணையும் என்று தான் கூறி வந்தனர். ஆனால், ஓ பன்னீர் செல்வம் தரப்பில் அணிகள் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா அவர்களால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறையும் வரை அவரை கட்சியில் சேர்க்கவில்லை. கட்சியில் சேர்க்கப்படாத ஒருவர் பற்றி, தலைமைக் கழகத்திற்கு தொடர்புடையவர் போல ஊடகங்கள் தான் அவர்களுக்கு முக்கித்துவம் கொடுப்பதாக கருதுகிறேன்.
வருங்கால அரசியலில் டிடிவி தினகரன் மிகப்பெரிய தலைவராக வருவார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்?
அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக தமிழக அரசியலில் யாரும் கருதவில்லை. ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அமைக்கப்பட்ட கூடாரம் தான் டிடிவி தினகரன் அணி.
அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்துள்ளதே?
ஜெயலலிதாவுக்கு பின்னர் சசிகலா பொதுச்செயலாளர் இல்லை என்பதை தொண்டர்ளே முடிவு செய்துவிட்டனர். அதிமுக சட்டவிதிபடி தொண்டர்களால் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகவே, சசிகலா பொதுச்செயலாளர் இல்லை. அவர் நியமனம் செய்யப்பட்டது செல்லாதவை. அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் செல்லாது.
இரு அணிகளும் இணைவதற்காக வாய்ப்பு உள்ளதா?
நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். நடைபெற்று வருவது பினாமி ஆட்சி என்று. பினாமியை பாதுகாக்கும் அமைச்சர்கள், பினாமிகளை வைத்து பாதுகாக்கும் அமைச்சர்களை பாதுகாக்கும் ஆட்சி தான் பினாமி ஆட்சி. குட்கா பினாமி அமைச்சர்களை கொண்டு இந்த அமைச்சரவை செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.