கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் காவல் நீட்டிப்பு

கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து, நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் பணியை கடந்த 15 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதாக கூறி, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கதிராமங்கலம் மக்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்கள் கிராமத்தில் மீத்தேன் திட்டம், பாறை படிம எரிவாயு எனப்படும் ஷெல் கேஸ் திட்டம் ஆகியவற்றை மறைமுகமாக செயல்படுத்த முனைவதாகவும், அதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி, எரிபொருள் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், அப்பகுதியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரியை பணிகள் செய்யவிடாமல் தடுத்தல், அவர்களை அச்சுறுத்துதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 10 பேரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அதற்காக நீதிமன்ற வளாகத்தில் ஏ.டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி.செழியன், கதிராமங்கலம் கிராம மக்கள் உள்ளிட்டோர் அவர்களை காண வந்திருந்தனர்.

கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இதன்பின், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், “காவிரி டெல்டா முடுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்”, என கூறினார்.

10 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டதால் உறவினர்களும் கதிராமங்கலம் மக்களும் கவலை அடைந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரமேஷின் மனைவி கீதா கணவரை போலீஸ் வேனில் ஏற்றியபோது கதறி அழுதார். காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான கவிதா தற்போது 9 மாத கர்ப்பமாக உள்ளார்.

×Close
×Close