சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் : வைகோ வழக்கில் உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு

சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அளவு அகற்றப்பட்டு இருக்கின்றது என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வைகோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த வழக்கு, இன்று (ஜூலை 28) சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதியரசர் சுந்தரேசன், நீதியரசர் சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐஐடி நிறுவனம் தொடுத்த ரிட் மனுவுடன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடுத்த ரிட் மனுவும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, ஏரிகள், குளங்கள், வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றிக் கொள்ளலாம் என்றும், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அடர்ந்து விட்டதாலும், அதை அகற்றிவிட்டு வேறு மரங்களை வைப்பதற்கு வாய்ப்பு இல்லாததாலும், அந்த மாவட்டங்களில் அகற்றுவதற்கு நிபுணர்குழு பரிந்துரைக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த வழக்கில், வைகோ எடுத்துரைத்த வாதங்கள் பின்வருமாறு: சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல வழக்காக நான் ரிட் மனு தாக்கல் செய்தேன். தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதியரசர் சுதாகர், நீதியரசர் வேலுமணி அமர்வு 2015 அக்டோபர் 28 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 2016 டிசம்பர் 20 ஆம் நாளன்று, அதே வழக்கு நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ‘தென் தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு, மாவட்ட ஆட்சியர்கள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆணை பிறப்பித்தனர். பின்னர் எனது வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தின் அனைத்துமாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளில் உள்ள அதிகாரிகளையும், இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளையும் நீதிமன்றம் ஏற்றதால், 941 அதிகாரிகளுக்கு சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான தாக்கீது பிறப்பிக்கப்பட்டது.

2017 ஜனவரி 31 ஆம் தேதியன்று, நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் பிறப்பித்த ஆணையின்படி, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான பணியை மேற்பார்வை இடுவதற்கான 120 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் கைப்பணத்தைச் செலவழித்து, ஊர் ஊராகச் சென்று, இப்பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் அனைவரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதை மேற்பார்வை இட்டனர்.

இன்று நிபுணர் குழு இன்று அளித்துள்ள பரிந்துரையில், ‘சீமைக்கருவேல மரங்களைப் பொதுமக்களே இயந்திரங்களைக் கொண்டு அகற்றலாம். கைகளாலும் வெட்டி அகற்றலாம்’ என்று கூறி இருப்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது என்று கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த மரத்தின் வேர்கள் 175 அடி ஆழம் வரையிலும் பாய்கின்றன. நிலத்தடி நீரை முழுமையாக உறிஞ்சி விடுகின்றது. ஜேசிபி, பொக்லைன் போன்ற இயந்திரங்களின் மூலம்தான் இதை அகற்ற முடியும். மேலோட்டமாக வெட்டினால் அவை மீண்டும் தழைத்து விடும்.

இந்த மரங்கள் மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது. தொடக்க காலத்தில் இது விறகுக் கரியாகக் கிராமவாசிகளுக்குப் பயன்பட்டது. ஆனால் தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகமானபிறகு, சீமைக்கருவேல மரங்களைக் கிராமவாசிகள் வெட்டுவது இல்லை. தண்ணீர்ப் பஞ்சம் என்ற பேராபத்தைத் தமிழ்நாடு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. நிலத்தடி நீரைச் சீமைக் கருவேல மரங்கள் முற்றாக உறிஞ்சி விடுகின்றன. உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) உறிஞ்சிக்கொண்டு கரிக்காற்றை (கார்பன் டை ஆக்சைடு) உமிழ்கின்றன. வெப்பம் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து விட்டதால், அங்கே வேறு செடிகளை வளர்க்க முடியாததால், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம் அல்ல என்று பரிந்துரைத்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால், இந்த மாவட்டங்களில் பாதிப்புக்கு சீமைக் கருவேல மரங்கள்தான் காரணம். நிபுணர் குழுவின் அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றது.

எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற வேலையைத் துரிதப்படுத்துகின்ற வகையில், நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன். இந்தப் பணியில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், சமூக நலனுக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டார்கள் என்பதையும் தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டார் வைகோ.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும், மற்ற இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் படிப்படியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அளவு அகற்றப்பட்டு இருக்கின்றது என்ற அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுத் தெரிவிப்பதோடு, அவர்கள் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கின்றேன்’ என்றார்.

அப்போது வைகோ, ‘வழக்கறிஞர்கள் சார்பாகத் தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்’ என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close