WEB EXCLUSIE
வெளிநாட்டில் இருந்த திமுக எம்.எல்.ஏ. சட்டசபையில் கலாட்டா செய்ததாக, சபாநாயகர் தனபால் வெளியேற்றியது அம்பலத்துக்கு வந்துள்ளது. இது முதல் தடவையல்ல... மூன்றாவது முறை.
தமிழக சட்டப்பேரவை கடந்த 14ம் தேதி கூடியது. பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், நம்பிக்கைக்கோரும் தீர்மானம் வெற்றி பெற முதல்வர் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான பிரச்னையை எழுப்பினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
சபையை நடத்தவிடாமல் செய்வதாக திமுக உறுப்பினர்கள் மீது குற்றம்சாட்டி, அவர்களை சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பேரவை விதிகளின் படி, ஒவ்வொரு உறுப்பினர்களின் பெயரையும் வாசித்தார், சபாநாயகர் தனபால்.
அப்போது மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிடிஆர்.பி.தியாகராஜன் பெயரையும் குறிப்பிட்டு அவரை வெளியேற்றுவதாக சொன்னார். ஆனால் அன்றைய தினம் அவர் சபைக்கு வரவே இல்லை. அவர் துபாயில் இருந்துள்ளார். அன்று மாலை சென்னை வந்த அவருக்கு டிவியில் செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சியாகியுள்ளார்.
இது குறித்து தியாகராஜனிடம் பேசினோம்.
‘சபாநாயகருக்கு என் மீது என்ன கோபம் என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பேரவையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றினார். அப்போது நான் பேரவை அருகில் இருக்கும் நுலகத்தில் இருந்தேன். சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்களைத்தானே அவர் நீக்க முடியும். இல்லாத என்னை நீக்கினார். உடன் நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அதன் பின்னர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, நான் பேரவையில் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போதும் ஒட்டு மொத்தமாக திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதாக சொன்னார். இந்த சம்பவம் குறித்து மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் வழக்குத் தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 14ம் தேதி நான் துபாயில் இருந்தேன். ஆனால் நான் சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக சொல்லி என் பெயரை குறிப்பிட்டு என்னையும் வெளியேற்றுவதாக அறிவித்த விடியோவை டிவி சேனல்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முதல் இரண்டு முறையும் ஒட்டு மொத்தமாக திமுக உறுப்பினர்களை நீக்குவதாக சொன்னார். இது சபை விதிகளை மீறிய செயல் என்று வழக்குப் போட்டேன். உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்லி நீக்க வேண்டும் என்பது விதி. அதை வழக்கில் குறிப்பிட்டு இருந்தேன்.
அதை யாரோ சபாநாயகருக்கு சொல்லியிருக்கிறார்கள். அவர் எல்லோர் பெயரையும் சொல்லிவிட்டார். சபையில் அமளியில் ஈடுபட்டவர்களைத்தானே வெளியேற்ற முடியும். வெளிநாட்டில் இருந்த நான் எப்படி சபையில் அமளி செய்ய முடியும். இதன் மூலம் சபாநாயகர் நடுநிலையாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. அன்றைய தினம் நான் மட்டுமல்ல, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மூர்த்தி ஆகியோரும் சபையில் இல்லை. அவர்களையும் நீக்கியுள்ளார். திமுக உறுப்பினர்களை உள்நோக்கத்தோடு வெளியேற்றுகிறார் என்பது நிருபணமாகிவிட்டது. சபையின் விதிகளைக் கூட தெரிந்து கொள்ள முடியாத இவரை எப்படி சபாநாயகராக ஏற்றுக் கொள்வது.
இது குறித்து சட்ட வல்லூநர்களுடன் ஆலோசனை நடத்தி, வழக்குத் தொடர்வேன். சபையிலேயே இந்த பிரச்னையை எழுப்ப முடியுமா? சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வர முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பேன்’ என்றார், பிடிஆர்.பி. தியாகராஜன்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது, குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.