Advertisment

குரூப் 4 தேர்வில் திருநர் சமூக சோகம்: தனி இட ஒதுக்கீடு கிடைக்குமா?

'இந்த கூட்டு இயக்கம் மூலம் சட்டப்போராட்டத்தை துவங்கியபோது ஒரு திருநங்கை கூட அரசு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தது. இப்போது, தமிழகத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திருர் சமூகத்து மக்கள் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசு தேர்வை எழுதி உள்ளனர். சட்டம் மீது நம்பிக்கை இருக்கிறது'.- கிரேஸ் பானு

author-image
Vasuki Jayasree
New Update
grace banu

“ வணக்கம் என் பெயர் அக்‌ஷயா, நான் ஒரு திருநங்கை.  கோவையிலிருந்து பேசுகிறேன். 2012-ல் இருந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை, தொடர்ந்து எழுதி கொண்டுருக்கிறேன்.  திருநங்கைகளுக்கு  தனியாக  இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், நல்ல மதிப்பெண் எடுத்தும் பணியில் சேர முடியவில்லை. ” என்ற காணொலி சமூக செயல்பாட்டாளர் கிரேஸ் பானுவின் முகநூல் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது.

Advertisment

கிட்டதட்ட இதுபோல் தேர்வு எழுதி, பணியில் சேர முடியாத 7-க்கும் மேற்பட திருநர் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடியோ பதிவு அவரது முகநூல் பக்கத்தில்  பகிரப்பட்டது. இந்த வீடியோவில் பேசிய திருநங்கைகள்,  அரசு பணியில் திருநர் சமூகத்திற்கு 1% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம்  முன்வைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக கிரேஸ் பானுவிடம் உரையாடினோம்.

திருநர் சமூக மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு , எதன்கீழ் வழங்கப்படும்?

இட ஒதுக்கீடு ஏற்கனவே செங்குத்து (vertical reservation ) முறையில் அதாவது சாதி சார்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு கிடைமட்ட முறையில் (horizontal reservation) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுபோலத்தான் திருநர் சமூகத்து மக்களுக்கு கிடைமட்ட முறையில் 1 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி மற்றும் அரசு நடத்தும் தேர்வுகள் மற்றும் கல்வி நிலையங்களில் இந்த 1 % இட ஒதுக்கீடு அமலாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீடு கேட்பது சரியா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  இதற்கு உங்கள் பதில்?

சாதிய ரீதியான ஒடுக்குமுறை எப்படி சிக்கலானதோ, அதுபோல்தான் பாலின ரீதியான ஒடுக்குமுறையும் சிக்கலானது .  18 வயது நிரம்பிய பெண்ணோ அல்லது ஆணோ, மிக எளிதாக கல்லூரிக்கு செல்லும் போது, கல்லூரி படிப்பை பெற திருநங்கை அல்லது திருநம்பி நீதிமன்றத்தின் படியேற வேண்டி இருக்கிறது. 2013-ம் ஆண்டு, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பியபோதுதான், ’professional course’ அதாவது மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளை திருநர் சமூகத்தினர் படிக்க முடியாது என்ற தகவல் கிடைத்தது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததன் மூலமாகத்தான், 2014-ல்  கவுன்சிலிங் மூலம் இன்ஜினியரிங் படிப்பில் நான்  சேர்ந்தேன். இந்தியாவிலேயே முதல் திருநர் இன்ஜினியர் நான்தான்.

டி.என்.பி.எஸ்.சி, தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை எழுதுவதற்கே, சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அதுபோல திருநர் மக்களுக்கான 1% இட ஒதுக்கீடு இன்று எழுந்த கோரிக்கை அல்ல. 2011-ம் ஆண்டில் இருந்து இந்த கோரிக்கையை முன்வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இந்தியாவிலேயே திருநர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற உரிமைக் குரல் தமிழகத்தில்தான் எழுப்பப்பட்டது. நானும், என்னை போன்ற திருநர் சமூகத்து மக்களும், சேர்ந்து ’திருநர் உரிமை கூட்டு இயக்கம்’ என்ற இயக்கத்தை 2010-ம் ஆண்டு தொடங்கினோம். 2011-ம் ஆண்டு, திருநர் சமூகத்து மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று, டி.என்.பி.எஸ்.சி தேர்வு முகமையை முற்றுகையிட்டோம், கண்ணகி சிலை முன்பு  சாலை மறியல் செய்தோம். தொடர்ந்து சட்டமன்றத்தையும் முற்றுகையிட்டோம். அப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் எங்கள் கோரிக்கையை முன்வைத்து கேள்வி எழுப்பினர். சட்டமன்றத்தை முற்றுகையிட்டபோதுதான் இந்த உலகமே எங்களை திரும்பி பார்த்தது. பிச்சை எடுத்துக்கொண்டும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், இப்போது கல்வி வேண்டும், வேலை வேண்டும் என்று கேட்கிறார்களே என்று திரும்பி பார்த்தது.

வீதியில் இறங்கி போராடினால் மட்டும் போதாது, சட்டப் போராட்டம் முக்கியம் என்பதால், அதை முன்னெடுத்தோம். டி.என்.பி.எஸ் தேர்வு உள்ளிட்ட தமிழக அரசு தேர்வுகளை எழுத திருநர் சமூகத்தை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

இந்த வழக்கில்  முதல் கோரிக்கையாக திருநர் மக்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும்  இரண்டாம் கோரிக்கையாக திருநர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தோம்.

2013-ம் ஆண்டில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல் கோரிக்கையான திருநர் மக்களை அரசு தேர்வு எழுத அனுமதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பால் 2014-ம் ஆண்டு, திருநங்கை சொப்னா (மதுரையை சேர்ந்தவர்) டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதினார்.  தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய முதல் திருநங்கை இவர்தான். தற்போது இவர் வணிக வரித்துறையின் (commercial tax ) உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார்.

2014, ஏப்ரல் 15-ம் தேதி திருநர் மக்களுக்கு கல்வி, பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிறது. இந்த தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து, நான் வழக்கு தொடர்ந்துதான், பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். டிப்லமோவில் 95 % மதிப்பெண் எடுத்திருந்தபோதும், கவுன்சிலிங்கில் எனக்கு தனியார் கல்லூரியைத்தான் ஒதுக்கினார்கள்.

2015-ம் ஆண்டில் பிரித்திகா யாஷினி காவல்துறையில் பணி அமர்த்துவது தொடர்பான வழக்கை தொடர்ந்தோம். இதன் தீர்ப்பு வந்தபிறகு, இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இஸ்ஸ்பெக்டர் ஆக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும்.

திருநர் சமூகத்து மக்களுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 2016-ம் ஆண்டு வெளியான தீர்ப்பில், 6 மாதங்களுக்குள் தமிழக அரசு, இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் 2017-ம் ஆண்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி இணைந்து முக்கிய நெறிமுறைகளை வடிவமைத்தது. இதன் மூலம் திருநர் சமூகத்து மக்களை  எம்.பி.சி (MBC) பிரிவில் சேர்த்தனர். இதிலிருந்துதான் முக்கிய சிக்கலே தொடங்கியது என்று கூற வேண்டும்.

 ஒரு பாலினத்தை சேர்ந்தவர்களை, ஒரு சாதி பிரிவின் கீழ் சேர்ப்பது சரியாக இருக்குமா? இது வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்காது.

தமிழக அரசு மட்டும் நினைத்தால் இந்த தனி இட ஒதுக்கீடு சாத்தியமாகுமா?

கண்டிப்பாக முடியும். இந்தியாவிலேயே கர்நாடகாவில்தான், திருநர் சமூகத்து மக்களுக்கு அரசு பணிகளில் 1 % இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டதிருத்தம் 2021-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தை பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய கர்நாடக மாநிலத்தால் முடியும், என்றால் நம் மாநிலத்திலும் இது சாத்தியம்தான்.

அரசியல் தலைவர்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தீர்களா?

இந்த இயக்கத்தை இந்தியா  முழுவதிலும் எடுத்துச் சென்றிருக்கிறோம். 2021ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவை எம்.பி-க்களிடம்  இந்த கோரிக்கையை முன்வைத்தோம். திருமாவளவன் உள்பட முக்கிய எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். தற்போது நடந்து முடிந்த மக்களவைக் கூட்டத் தொடரில்கூட, திருநர் சமூக மக்களின் இட ஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பதிலைத்தான் மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த 1 % இட ஒதுக்கீட்டால் திருநர் சமூகத்து மக்கள் வாழ்வில் என்ன மாற்றம் நிகழும்?

தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், உதாரணமாக  7 ஆயிரம் அரசு பணியிடங்களில், திருநர் மக்களில் 10 பேருக்காவது அரசு பணி கிடைக்கும்.

பொது சமூகத்திடம் நீங்கள் முன்வைக்கும் கேள்வி?

’ஏன் பிச்சை எடுக்குறாங்க? ஏன் பாலியல் தொழில் செய்யுறாங்க’ என்று கேள்வி கேட்கும் அனைவரும், கல்வி நிறுவனங்களில், அரசு பணியிடங்களில் எங்களுக்கு தேவையான 1 % இட ஒதுக்கீடு ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்.

2011 முதல் 2023ம் வரை தொடர் சட்டப் போராட்டம் சலிப்பை தருகிறதா? பெண் மற்றும் ஆண்களை போல எல்லா உரிமைகளும் திருநர் சமூகத்திற்கும் கிடைக்குமா?

இந்த கூட்டு இயக்கம்  மூலம் சட்டப்போராட்டத்தை துவங்கியபோது ஒரு திருநங்கை கூட அரசு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தது. இப்போது, தமிழகத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திருர் சமூகத்து மக்கள் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசு தேர்வை எழுதி உள்ளனர். சட்டம் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், கிட்டதட்ட 5 வருடங்களுக்குள் திருநர் சமூகத்தின் நிலையே மாறிவிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment