புதிய அணு உலைக்கு அனுமதி கொடுத்ததற்கு மமக எதிர்ப்பு

நாட்டில் 22 அணுஉலைகள் உள்ளநிலையில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் 10 அணுஉலைகளைக் கொண்டுவருவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

இந்தியாவில் புதிதாக 10 அணுஉலைகளை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன் அன்று ஒப்புதல் அளித்துள்ளது. பேராபத்தை விளைவிக்கும் இந்த அணுஉலைகளின் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த அணுஉலைகள் வரும் 2021-22ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே நாட்டில் 22 அணுஉலைகள் உள்ளநிலையில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் 10 அணுஉலைகளைக் கொண்டுவருவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. 

புதிதாக அமைக்கப்பட உள்ள அணுஉலைகளுக்குத் தேவையான நன்னீர், குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் இந்தியாவில் கிடைப்பது என்பது அரிது. அதேபோல் அணுஉலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளைப் பாதுகாப்பாகப் புதைக்க இந்தியாவில் ஒரு நிரந்தர இடம் இல்லாத நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது.

அணுஉலைகளால் ஏற்படும் கதிரியக்கம் (Radiation) மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படும். இந்தக் கதிரியக்கம் கிட்டத்தட்ட சுமார் 45 ஆயிரம் ஆண்டுகள் வீரியத்துடன் இருக்கும். இந்த அணுஉலைகளால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

அணுஉலைகளை அமைப்பதற்கு முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக  ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த மூன்று அடிப்படை விஷயங்களும், புதிதாக அமைக்கப்பட உள்ள அணுஉலைகள் விஷயத்தில் பின்பற்றப்பட்டவில்லை. இதேநிலைதான் கூடங்குளம் அணுஉலை விஷயத்திலும் நடத்தேறியது.

மத்திய பாஜக அரசு பேராபத்தை உருவாக்கும் இந்த அணுஉலை திட்டங்களைக் கைவிட்டு விட்டு மக்கள் நலத்திட்டங்களில் தனது கவனத்தை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அறிகையில் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close