தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய மறுப்பது சட்டவிரோதமானது என மின்வாரிய அண்ணா தொழிலாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், 8 வாரங்களில் பதிலளிக்குமாறு மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் 1999 ம் ஆண்டு முதல் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றியவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், இந்த விவகாரத்தை தொழில் தகராறு தீர்ப்பாய விசாரணைக்கு அனுப்பி, 2007ல் தமிழக தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு மின்சார வாரியம் பதிலளிக்காததால், தமிழ்நாடு அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் வாதத்தின் அடிப்படையில், பணிநிரந்தரம் வழங்கும்படி, 2010 ல் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்த மனுவை ஏற்று விசாரித்த தொழில் தகராறு தீர்ப்பாயம், ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கை நியாயமற்றது எனக் கூறி, பணிநிரந்தரம் வழங்க மறுத்து, கடந்த ஆகஸ்ட் 18 ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மின்வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டி.கதிர்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 ஆயிரத்து 592 ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய மறுத்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது... ஆதாரங்களை ஆராயாமல் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது... இந்த தொழிலாளர்கள் இன்னும் ஒப்பந்தப் பணியாளர்களாகவே தொடர்கின்றனர் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், தொழில் தகராறு தீர்ப்பாயம், அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளி்ட்டோருக்கு நீதிபதி ராஜா உத்தரவிட்டார்.