அறிவியலை மற்றொரு விதமாக மக்களின் மனதில் பதியவைக்கிறது, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பூங்கா. அடையார் சுற்றுச்சூழல் பூங்கா என்ற மற்றொரு பெயரைக் கொண்ட இந்த பூங்கா 2011இல் திறக்கப்பட்டது.
தற்போது இந்த சுற்றுசூழல் பூங்காவைப் பற்றி மேலும் தெரிந்துக்கொண்டு, விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்திலிருந்து (TNUIFSL) தேர்ந்த நிபுணர்களை நியமித்திருக்கின்றனர்.
இந்த சுற்றுசூழல் பூங்காவிலுள்ள வாழ்வாதாரத்தையும் இயற்கையையும் மக்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு புதுப்பிக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் குறிக்கோள் என்று கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல், நகர்ப்புற ஈரநிலத்தின் சூழலை அனுபவிக்கவும், பல்லுயிர் வளங்கள் மற்றும் தாவர இனங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2011ல் உருவாக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் மறுசீரமைக்கும் வகையில், நர்சரி செயல்பாடுகளை பெருக்குதல், சுற்றுச்சுவரை சரி செய்தல் மற்றும் கசிவுப்பாதையை மேம்படுத்துதல், நீரில் உள்ள வண்டல் மண் படிதல் போன்ற மேம்பாடுகளுக்கு மறுமதிப்பீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
தடுப்பு சுவர்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதி வழங்குவது போன்ற நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளில் பூங்காவை வலுவான மையமாக மாற்ற ஏதேனும் புதிய முயற்சி தேவைப்படுகிறது என்று கூறுகின்றனர்.
எழில் கொஞ்சும் இயற்கை அமைப்புகள், அறிவியல் கல்வி மற்றும் பயிற்சி, பாதுகாப்பான நடைபாதைகள், தளங்கள், மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றின் கலவையுடன் தனித்துவமான நகர்ப்புற பூங்காவை உருவாக்குவதும் ஆய்வில் அடங்கும்.
இந்த சுற்றுசூழல் பூங்கா, அடையாறு சிற்றோடை மற்றும் திரு.வி.க. பாலத்தின் கிழக்கு பகுதியில் சுமார் 358 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
செவ்வாய்க் கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 6 முதல் 8 மணி வரையிலும், பார்வையாளர்களுக்காக காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பூங்கா திறந்திருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil