மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, அக்டோபர் 25-ஆம் தேதி முதல் விசாரணையை துவங்க உள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 5 அன்று உயிரிழந்தார். பல்வேறு உடல் நலக்குறைவுகள் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறப்புக்கு பின், அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அப்போது ஒரு அணிக்கு தலைமை வகித்த ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையின்போதும், இந்த கோரிக்கையையே பிரதானமாக முன் வைத்தார்.
ஓ.பன்னீர் செல்வம் நீதி விசாரணைக்கு வலியுறுத்திய நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்டு 17 அன்று அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் ஆகஸ்டு 21 அன்று இணைந்தன. ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து செப்டமர் 25-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது”, என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்பின், விசாரணை ஆணையம் இயங்க எழிலகத்தில் அமைந்துள்ள கலச மஹாலில் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு, ஒலி ஊடுருவாத அறை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில், அவர் இன்னும் விசாரணையை துவங்கவில்லை. ஆனால், 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி முதல் விசாரணை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும், 2 மாதங்களுக்குள் விசாரணையை முழுமையாக முடிக்க முடியுமா? ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எந்த பலனும் இல்லை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.