மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை ஆணையராக இன்று பொறுப்பேற்றார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முதன் முதலாக கோரிக்கை வைத்தார். அதன்பின், 'ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்' என முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
பின்னர் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கூட்டணி இணைந்த போது, 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும் சில அமைச்சர்களும் இதே போன்று தெரிவித்தனர்.
இதனால், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை கண்டறிய விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, தமிழக அரசு, ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கான கால அவகாசம் 3 மாதங்கள் ஆகும். 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழல், அவரது அப்போதைய நிலைமை, அதன்பிறகு டிசம்பர் 5-ம் தேதி வரை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை ஆகியவை குறித்து இந்த ஆணையம் விசாரிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 25-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யவேண்டும்.
இதைத் தொடர்ந்து, இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.