அதிமுக வேட்பாளராக மதுசூதனனை அறிவிக்க இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று ஆலோசனைக்கு பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் வெளியிடுகிறார்கள்.
சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (நவம்பர் 27) தொடங்குகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் இருக்கிறது.
ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரான மருது கணேஷை மீண்டும் வேட்பாளர் ஆக்கியிருக்கிறது திமுக! கடந்த முறை போட்டியிட்ட ஜெ.தீபா, நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோரும் மீண்டும் களம் இறங்குகிறார்கள்.
அதிமுக கடந்த முறை இரு அணிகளாக போட்டியிட்டது. அதில் அம்மா அணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் இந்த முறை சுயேசையாக களம் இறங்குகிறார். இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக சார்பில் அவைத்தலைவர் மதுசூதனனை வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார் மதுசூதனன். கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என நிருபர்களிடமும் மதுசூதனன் தெரிவித்தார்.
இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இடையே பூசல் அதிகரித்து வரும் நிலையில் மதுசூதனனை வேட்பாளர் ஆக்குவதற்கு இபிஎஸ் தரப்புக்கு முழு விருப்பம் இல்லை. ஆனாலும், கடந்த முறை நிறுத்திய வேட்பாளரை நிறுத்தினால்தான் பிரசாரம் சுலபம் என்கிற கருத்தை ஓபிஎஸ் தரப்பு அழுத்தமாக தெரிவித்தது. தவிர, ஆர்.கே.நகரில் வேறு யாரையும்விட மதுசூதனனுக்கு அறிமுகம் அதிகம்!
மதுசூதனன் - அமைச்சர் ஜெயகுமார் இடையிலான அரசியல், மற்றும் தேர்தலில் ஜெயித்தால் மதுசூதனன் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பார் என்கிற பேச்சுகள் இன்னமும் இபிஎஸ் அணியை உறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் இபிஎஸ் தரப்பை சமாதானப்படுத்தும் விதமாகவே ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நல்லாட்சி நடத்தி வருகிறது’ என குறிப்பிட்டதாக கூறுகிறார்கள்.
ஆர்.கே.நகர் வேட்பாளருக்காக விருப்ப மனுத் தாக்கல் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. மதுசூதனன் மட்டுமே மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது. அடுத்து கூடும் ஆட்சிமன்றக் குழு, மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்கும் என தெரிகிறது.
தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அங்கு நடக்கிறது. அதில் இபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொள்கிறார்கள். வருகிற 5-ம் தேதி ஜெயலலிதா நினைவு தின அமைதி ஊர்வலம் நடத்துவது குறித்தும், ஆர்.கே.நகர் பிரசார ஏற்பாடுகள் குறித்தும் அதில் விவாதிக்க இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.