ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் விதிமீறலுக்கான முதல் வழக்கு இது!
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 27-ம் தேதி முதல் நடைபெறுகிறது. நேற்று ( டிசம்பர் 1) ஒரே நாளில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேட்சையாக களம் இறங்கும் டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
டி.டி.வி.தினகரன் தரப்பில் முதல் நாளே ‘மாஸ்’ காட்டுவதற்காக பெருமளவில் பெண்களும், தொண்டர்களும் திரட்டப்பட்டிருந்தனர். இதனால் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் குறிப்பிட்ட நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்ததாகவும், டிடிவி தினகரன் திரட்டிய கூட்டம் காரணமாக அந்தப் பக்கல் செல்வதை தவிர்த்ததாகவும் கூறுகிறார்கள்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுக வி.ஐ.பிக்கள் சிலரை டிடிவி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, தேர்தல் அதிகாரி அலுவலகம் அருகே செல்ல விடாமல் தடுத்த நிகழ்வுகளும் அரங்கேறின. தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு புறம்பாக கூடுதல் வாகனங்களுடன் வருகை தந்தது தொடர்பாக டிடிவி தினகரன் மீது இன்று தேர்தல் அதிகாரி சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது. அதன்படி தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி பதிவான முதல் விதிமீறல் வழக்கு இதுதான். தொடர்ந்து இதுபோல டிடிவி தினகரனின் ஒவ்வொரு விதிமீறலையும் கண் கொத்திப் பாம்பாக கவனித்து வழக்குகள் மூலமாகவே தேர்தல் களத்தில் டிடிவி தினகரனுக்கு நெருக்கடி கொடுக்க ஆளும் தரப்பு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.