ஆர்.கே.நகரில் இந்த முறை ரெய்டும், கண்காணிப்பும் கடந்த முறையைப் போல நடக்குமா? இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் அட்டவணை வருமாறு:
தேர்தல் அட்டவணை :
வேட்புமனு தாக்கல் தொடக்கம் : நவம்பர் 27
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 4
வேட்புமனுக்கள் பரிசீலனை : டிசம்பர் 5
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் : டிசம்பர் 7
வாக்குப் பதிவு : டிசம்பர் 21
வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 24
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையொட்டி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி, கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25-ம் தேதிக்கு முன்னதாகவே தேர்தல் நடைமுறைகளை முடித்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் பிரதான சர்ச்சை என்னவென்றால், அதிமுக.வின் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு நேற்றுதான் (நவம்பர் 23) இரட்டை இலையை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. அடுத்த நாளே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது எதார்த்தமானதுதானா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதமே இரட்டை இலையை முடக்கியது இந்திய தேர்தல் ஆணையம். இபிஎஸ்-ஓபிஎஸ் அணியின் எல்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் எண்ணிக்கை அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதாக நேற்றைய உத்தரவில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இந்த எண்ணிக்கையை உறுதி செய்யவா 8 மாதங்கள் வரை தேர்தல் ஆணையம் காத்திருந்தது?
இரு அணிகளும் அடிப்படை உறுப்பினர்களின் கையொப்பங்களை பெற்று லட்சக்கணக்கில் அபிடவிட்களை தாக்கல் செய்தபோது மெளனப் பார்வையாளராக இருந்து காலத்தை கடத்தியது இதே தேர்தல் ஆணையம்தான். அப்போது சாதாரண உறுப்பினர்களின் அபிடவிட்கள் தேவையில்லை என கூறவில்லை.
ஆனால் அக்டோபர் 30-க்குள் சின்னம் வழங்கும்படி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்த வேளையில், சசிகலா அணி கரைந்து இபிஎஸ்-ஓபிஎஸ் அணி வலுப்பெற்றிருந்தது. உடனே அவசரமாக இரட்டை இலை வழக்கை விசாரித்தது. ‘அடிப்படை உறுப்பினர்களின் அபிடவிட்கள் இனி வேண்டாம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, பதவியில் இருந்த நிர்வாகிகள் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்’ எனக் கேட்டது.
அந்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், இரட்டை இலையையும் ஒதுக்கி அறிவித்தது. அடுத்த நாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பும் வருகிறது. இந்த விஷயத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக இந்திய தேர்தல் ஆணையம் நடந்துகொண்டதாக டிடிவி தினகரன் தரப்பு மட்டும் குற்றம் சாட்டவில்லை. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் கருத்து அதுதான்!
கடந்த முறை பண வினியோகப் புகாரின் பேரிலேயே தேர்தலை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம். பண வினியோகமற்ற தேர்தலை நடத்தவே இவ்வளவு காத்திருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. இப்போது எழும் கேள்வி என்னவென்றால், ஆளும் தரப்புக்கு சின்னம் பெற்றுக்கொடுக்க இவ்வளவு மெனக்கெட்ட தேர்தல் ஆணையம், இந்த முறை பணப் புழக்கத்தை தடுக்க உளப்பூர்வமாக பணியாற்றுமா? என்பதுதான்.
ஒருவேளை அப்படி பணப்புழக்க புகார்கள் எழுந்தால், கடந்த முறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தியதைப் போன்ற ரெய்டுகளை வருமான வரி துறை நடத்துமா? என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் இயங்கும் முறைகளைப் பார்த்தே, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளையும் கணிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.