ஆர்.கே.நகரில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்துவதா? அல்லது, ஜெயகுமாரின் ஆதரவாளரை தேர்வு செய்வதா? என்பதை நிர்ணயிப்பதே இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு சவால்!
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் அட்டவணை வருமாறு:
வேட்புமனு தாக்கல் தொடக்கம் : நவம்பர் 27, வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 4, வேட்புமனுக்கள் பரிசீலனை : டிசம்பர் 5, வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் : டிசம்பர் 7, வாக்குப் பதிவு : டிசம்பர் 21, வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 24.
இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்கிய அடுத்த நாளே தேர்தல் அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இரட்டை இலை சின்னத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருப்பது இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு பெரிய பலமாகியிருக்கிறது. இதனால் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் அவர்கள் தரப்பில் கூறி வருகிறார்கள்.
இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இந்தத் தேர்தலில் முதல் சவால், வேட்பாளரை தேர்வு செய்வதுதான்! கடந்த முறை இங்கு ஓபிஎஸ் அணி சார்பில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் வேட்பாளராக நின்றார். சசிகலா – இபிஎஸ் அணி தரப்பில் அப்போது டிடிவி தினகரன் களம் கண்டார்.
இந்த முறை ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மதுசூதனனையே வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பதில் ஓபிஎஸ் தரப்பு மும்முரமாக இருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு, ஒருங்கிணைந்த அதிமுக.வில் ஓபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் ஒதுக்கப்படுவதாக மைத்ரேயன் எம்.பி. ஒரு பதிவை வெளியிட்டார். மைத்ரேயன் வெளியிட்ட அந்த பதிவு, மொத்த ஓபிஎஸ் அணியினரின் குமுறலாகவே பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் அணியின் அந்த மனக்குமுறலை போக்கும் விதமாக மதுசூதனனை வேட்பாளர் ஆக்கவேண்டும் என்பது அவர்கள் தரப்பு கோரிக்கை! தவிர, இரட்டை இலை சின்னம் வழக்கில், ‘இ.மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதாக’ தேர்தல் ஆணைய அறிவிப்பில் இருக்கிறது. எனவே அதற்கு கெளரவம் சேர்க்கும் வகையிலும் அவரை வேட்பாளராக்க வேண்டும் என்பது ஓபிஎஸ் தரப்பு வாதம்!
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே அதிக அறிமுகம் பெற்றவரான மதுசூதனன், கடந்த முறை தொகுதி முழுவதும் பிரசாரம் செய்த அனுபவத்தையும் வைத்திருக்கிறார். இதையும் ஒரு ‘பாயிண்ட்’டாக அவர்கள் முன்வைக்கிறார்கள்.
ஆனால் இபிஎஸ் தரப்போ, மதுசூதனனின் வயதை சுட்டிக்காட்டி அவரை தவிர்க்க விரும்புகிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கடைசி சில தேர்தல்களில் மதுசூதனனுக்கு தேர்தல் ‘சீட்’ கொடுக்கவில்லை. அதையும் இபிஎஸ் தரப்பு சுட்டிக் காட்ட இருக்கிறார்கள்.
இதையெல்லாம்விட, மதுசூதனனை தவிர்க்க இபிஎஸ் தரப்பு விரும்புவதற்கு பிரதான காரணம், அமைச்சர் ஜெயகுமார். வட சென்னையில் மதுசூதனனுக்கும், ஜெயகுமாருக்கும் ஜெயலலிதா காலத்திலேயே கடுமையான பலப்பரீட்சை உண்டு. அண்மையில் இதே ஆர்.கே.நகர் தொகுதிக்குள் ஜெயகுமாருக்கு எதிராக மீனவர்கள் பிரச்னையில் பகிரங்கமாக பேட்டி கொடுத்தார் மதுசூதனன். அடுத்த நாள் அங்கு ஜெயகுமாருக்கு போட்டியாக மீனவர்கள் போராட்டம் நடத்தியதில் மதுசூதனனின் பின்னணி இருந்ததாக பேசப்பட்டது.
இபிஎஸ் அணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருப்பவர் ஜெயகுமார். கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான சர்ச்சைக்குரிய அத்தனை விவகாரங்களையும் ஜெயகுமார் மூலமாக மீடியாவிடம் பகிர்ந்து வருகிறது இபிஎஸ் தரப்பு! அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்குகூட அரசு சார்பில் நிதி அமைச்சரான துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸுக்கு பதிலாக ஜெயகுமாரையே முதல்வர் தரப்பு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகரில் மதுசூதனனை நிறுத்தி, ஒருவேளை இவர்கள் விரும்புகிற மாதிரி ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயித்தால், மதுசூதனனை அமைச்சர் ஆக்கவேண்டிய நெருக்கடி இபிஎஸ்.ஸுக்கு ஏற்படும். காரணம், கட்சியின் அவைத்தலைவர் என்கிற பொறுப்பில் இருப்பதோடு, மேலே சொன்னதுபோல இரட்டை இலை வழக்கில் வென்றவராகவும் மதுசூதனன் முன்னிறுத்தப்படுகிறார்.
அப்படி ஒருவேளை மதுசூதனன் அமைச்சர் ஆகிவிட்டால், வட சென்னை அரசியலில் ஜெயகுமாரின் கதி அதோ கதிதான்! இதையெல்லாம் கருத்தில் கொண்டே மதுசூதனனை வேட்பாளர் ஆக்க இபிஎஸ் தரப்பு தடை போடும் என தெரிகிறது. நவம்பர் 27-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 4 வரை வேட்புமனுத் தாக்கலுக்கு அவகாசம் இருப்பதால், நவம்பர் இறுதிக்குள் வேட்பாளரை அதிமுக முடிவு செய்யும் எனத் தெரிகிறது.