ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக.வுக்கு ‘கேக் வாக்’காக இருக்குமா? அதன் பலம் என்ன? பலவீனம் என்ன? திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுக்கும் வியூகம் என்ன?
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் அட்டவணை வருமாறு:
வேட்புமனு தாக்கல் தொடக்கம் : நவம்பர் 27, வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 4, வேட்புமனுக்கள் பரிசீலனை : டிசம்பர் 5, வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் : டிசம்பர் 7, வாக்குப் பதிவு : டிசம்பர் 21, வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 24.
இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்கிய அடுத்த நாளே தேர்தல் அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இரட்டை இலை சின்னத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருப்பது இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக.வுக்கு பலமாகியிருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பாக டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பாக இ.மதுசூதனன், தி.மு.க. சார்பாக மருது கணேஷ், தே.மு.தி.க. சார்பாக மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக லோகநாதன், ஜெ.தீபா பேரவை சார்பாக தீபா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
கடந்த முறை அதிகாரபலம், பண பலம் ஆகியவற்றுடன் டிடிவி தினகரன் ‘டஃப் பைட்’ கொடுத்தார். ஆனாலும் கடைசி கட்டத்தில் ஓபிஎஸ் அணியின் இ.மதுசூதனனுக்கும், திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கும் இடையே நடந்த உக்கிர போட்டியில், யார் ஜெயித்தாலும் குறைவான வாக்குகளிலேயே ஜெயிக்க முடியும் என்ற நிலைமை இருந்தது.
அதாவது, டி.டி.வி.தினகரன் அதிக வாக்குகளை பிரிக்கத் தயாராக இருந்த நிலையிலும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்துவது திமுக.வுக்கு சுலபமாக இருந்திருக்காது என்பதே அப்போது நிலவிய இறுதிகட்ட நிலவரம்!
இதற்கு பிரதான காரணம், தமிழகத்தில் திமுக மிக பலவீனமான கட்டமைப்பைக் கொண்ட ஒரு தொகுதி ஆர்.கே.நகர். ‘சென்னையின் ஆண்டிப்பட்டி’ என திமுக.வினரே இந்தத் தொகுதியை செல்லமாக (!) அழைப்பதுண்டு.
கடந்த முறை தேர்தல் ரத்தான பிறகு வெளிமாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் இந்த பலவீனத்தை ஸ்டாலினிடம் பட்டியல் இட்டனர். அதன்பிறகு ஆர்.கே.நகர் நிர்வாகிகளை பகுதி, வட்டம் வாரியாக அழைத்துப் பேசினார் ஸ்டாலின். ஆனாலும் அங்கு நிலவும் கோஷ்டி பூசல்களை தீர்க்கவோ, கட்டமைப்பை வலுப்படுத்தவோ நடவடிக்கை இல்லை.
அதிமுக.வைப் பொறுத்தவரை இங்கு ஆட்சி மீதான நெகடிவ் இமேஜைத் தாண்டி, கட்சியின் வாக்கு வங்கி கரை சேர்க்கும் என எதிர்பார்க்கிறது. திமுக.வைப் பொறுத்தவரை கட்சியின் பலவீனங்களைத் தாண்டி, ஆட்சி மீதான நெகடிவ் இமேஜ் தங்களை வெற்றிபெற வைக்கும் என நினைக்கிறது. ஆக, இரு கட்சிகளுக்குமே பிளஸ், மைனஸ் இருக்கிறது.
குறிப்பாக இங்கு கணிசமாக உள்ள மீனவ மக்கள் மத்தியில் திமுக.வின் வாக்கு வங்கி அதல பாதாளத்தில் இருக்கிறது. இங்குள்ள மீனவக் குப்பங்களில் கடந்த முறை மதுசூதனனுக்கு அடுத்தபடியாக ஜெ.தீபாவுக்கு அதிக ஆதரவு தென்பட்டதை அங்கு பிரசாரம் செய்த சர்வ கட்சித் தொண்டர்களும் உணர்ந்தார்கள்.
குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம், கடந்த முறையைப் போல டிடிவி.தினகரன் இந்த முறை பெரிய தாக்கத்தை உருவாக்குவது சிரமம். காரணம், ஆட்சியும் அதிகாரமும் அவரிடம் இல்லை. தவிர, கடந்த முறை இரட்டை மின் விளக்கை எதிர்கொண்ட அவர், இந்த முறை இரட்டை இலையை எதிர்க்கிறார். தினகரன் குறைவாக வாங்கும் ஒவ்வொரு வாக்கும், அதிமுக.வுக்கு பலத்தை சேர்க்கலாம்.
இதையெல்லாம் யோசித்தோ என்னவோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக தயங்கியது என்பது நிஜம்! போலி வாக்காளர்களைக் குறிப்பிட்டு ஒரு வழக்கும், கடந்த முறை ஐ.டி. ரெய்டில் நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து ஒரு வழக்கும் திமுக தொடர்ந்த பின்னணி இதுதான். ஆனால் இப்போது தேர்தலை எதிர்கொண்டே ஆகவேண்டிய நிலை!
ஆளும்கட்சியான அதிமுக.வுக்கு இங்கு ஆள்பலம், பணபலத்தை திரட்டி பிரசாரம் செய்வது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு என எதிலும் பதவி சுகம் காணாத திமுக நிர்வாகிகள், ‘மீண்டும் ஒரு இடைத்தேர்தலா?’ என திகிலடித்து நிற்கிறார்கள்.
என்னதான் தேர்தலை நியாயமாக நடத்துவது குறித்து வெளியே பேசினாலும், குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்றாமல் கட்சித் தொண்டர்களே பிரசாரம் செய்ய வருவதில்லை. ஆளும்கட்சி சார்பில் வாக்காளர்களை கவனிக்கும் பட்சத்தில், மக்களே தேடி வந்து திமுக தேர்தல் பணி மனைகளை முற்றுகையிடும் வழக்கம் இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க இருக்கிறது.
இது போன்ற நெருக்கடியால் கடந்த முறை ஆர்.கே.நகரில் திமுக பணிமனைகள் சிலவற்றை ஓரிரு நாட்கள் திறக்க முடியாத சூழல் உருவானதை கட்சி நிர்வாகிகள் அறிவார்கள். இந்த முறை பண்டிகை நெருக்கத்தில் இடைத்தேர்தல் வருவதால், மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்குமோ? என்கிற கலக்கமும் கட்சிகளிடம் இருக்கிறது. தவிர, கடந்த முறை டிடிவி தினகரன் வேட்பாளர் என்பதால், ஆளும்கட்சிக்கு எதிராக வாள் சுழற்றிய தேர்தல் ஆணையம், ஐ.டி., மத்திய காவல் படைகள் இந்த முறை அதே வேகத்தைக் காட்டுமா? என்பது இன்னும் முக்கியமான கேள்வி!
இதற்குப் பிறகும் ஆர்.கே.நகரில் கடந்த முறையைப் போலவே பலமுனைப் போட்டி நிகழுமா? அது திமுக.வுக்கு மைனஸ் ஆகுமா? என்கிற கேள்விகள் இருக்கின்றன. எனவே காமெடி அமைச்சர்களால் அரசுக்கு உருவாகியிருக்கும் நெகடிவ் இமேஜை வைத்து மட்டும் திமுக சுலபமாக ஜெயித்துவிட முடியாது என்பதுதான் நிலவரம்! இதை எதிர்கொள்ள திமுக தன்னை எப்படி வலுப்படுத்திக் கொள்ளப் போகிறது? கூட்டணியை இன்னும் வலுப்படுத்துவாரா ஸ்டாலின்? என்பவை அடுத்த கேள்விகள்!
இந்தக் கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகளைப் பொறுத்தே ஆர்.கே.நகர் ரிசல்ட் இருக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.