ஆர்.கே.நகர் பலப்பல ‘ரெக்கார்ட்’களை பிரேக் செய்து கொண்டிருக்கிறது. இங்கு ஒரே நாளில் பட்டப்பகலில் பாய்ந்த தொகை மட்டும் 120 கோடி என்றால் நம்ப முடிகிறதா?
ஆர்.கே.நகர், மூன்றாவது முறையாக இடைத்தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இடையில் ஒரு பொதுத்தேர்தலையும் சந்தித்துவிட்டது. இன்றைய நிலவரப்படி, ஆர்.கே.நகரில் வீட்டு வாடகை, நிலத்தின் மதிப்பு எல்லாமே எகிறிக் கொண்டிருக்கிறது. காரணம், அடிக்கடி நடைபெறும் இடைத்தேர்தல்தான்!
ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரலில் நடப்பதாக இருந்த இடைத்தேர்தல், பணப்பட்டுவாடா புகாரின் பேரிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனுக்காக அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பணத்தை அள்ளி விட்டதாக புகார் எழுந்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில், 87 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. அதனை குறிப்பிட்டே தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நிறுத்தியது. அப்போது, ஒரு வாக்காளரின் தலைக்கு 4000 ரூபாய் வீதம் 80 கோடி பட்டுவாடா நடந்ததாக புகார் கூறப்பட்டது.
முந்தைய இடைத்தேர்தல்களில் தலைக்கு 1000, 2000 என இருந்ததை ‘டபுள்’ ஆக்கி அப்போது ‘சாதனை’ படைத்தது ஆர்.கே.நகர். இந்த முறை அதே ஆர்.கே.நகர் தனது சொந்த ‘சாதனை’யை முறியடித்துக் கொண்டிருக்கிறது. நேற்று (டிசம்பர் 16-ம் தேதி) ஒரே நாளில் ஆர்.கே.நகரில் ஆளும்தரப்பு பாயவிட்ட தொகை 120 கோடியாம்!
பட்டுவாடா நடந்த நேரம்தான், நம் அரசியல்வாதிகள் எவ்வளவு ‘கில்லி’கள் என்பதை உலகுக்கே புரிய வைக்கிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நள்ளிரவில் பதுங்கி, மறைந்து பண வினியோகம் நடந்தது. அதுவே பிறகு அதிகாலை 5 முதல் 7 மணி வரையாக பரிணாமம் பெற்றது. ஆனால் இந்த முறை ஆர்.கே.நகரில் பட்டுவாடா ஆரம்பித்த நேரம் பகல் 11 மணி!
வழக்கம்போல இந்த முறையும் அதிகாலையில் பட்டுவாடா செய்திருப்பார்கள்தான்! ஆனால் இந்த முறை மாலை 5 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அரசியல் கட்சியினர் யாரும் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கக்கூடாது என புதிய நிபந்தனையை தேர்தல் ஆணையம் போட்டுவிட்டதே! அதனால்தான் பகல் 11 மணியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
திமுக, டிடிவி அணி, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சியினர் காலையில் ஒரு மூச்சு பிரசாரத்தை முடித்துவிட்டு ஓய்ந்திருந்த நேரம் அது! தொகுதி முழுவதும் வியாபித்திருந்த ஆளும்கட்சி நிர்வாகிகள் பிற்பகல் 2 மணிக்குள் சுமார் 80 சதவிகித வாக்காளர்களை குளிர்வித்துவிட்டார்கள். அதாவது சுமார் 2 லட்சம் பேருக்கு, தலைக்கு ரூ 6000 வீதம் மொத்தம் 120 கோடியாம்!
ஆர்.கே.நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பண வினியோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி அணி கொடிபிடிக்க, அந்தப் பகுதி மக்களே டிடிவி அணியை விரட்டியடித்தனர். இன்னும் சில இடங்களில் பண வினியோகம் செய்தவர்களை திமுக சட்டமன்றக் கொறடா சக்கரபாணி, சென்னை எழும்பூர் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ.பத்மநாபன் ஆகியோர் கையும் களவுமாக பிடித்தனர்.
அப்படி பிடிபட்டவர்கள் மொத்தம் 10 பேர்! இவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் ஆகியிருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு இணையாக பத்ரா என்கிற அதிகாரியை சிறப்பு தேர்தல் ஆணையராக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பண வினியோகத்தை தடுத்து, தேர்தலை நியாயமாக நடத்துவதுதான் அவரது பணி!
Even worse is that no one is being punished for money distribution. There is no bigger mockery of democracy than cancelling the election & not punishing anyone for it. Who was punished for the cancellation in April? EC should go ahead with the poll. #RKNagarByPoll
— Sumanth Raman (@sumanthraman) December 16, 2017
கடந்த ஏப்ரலில் இதேபோல சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தலை நிறுத்த பரிந்துரை செய்தவரும் இதே பத்ராதான்! நேற்று சென்னை வந்து சேர்ந்ததும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, விறுவிறுப்பாக ஆர்.கே.நகருக்கு ‘ரவுண்ட்ஸ்’ போனார் பத்ரா. புதிதாக துணை ராணுவப் படையினரும் பெருமளவில் இறக்கப்பட்டு ரோந்து சென்றார்கள். கிட்டத்தெட்ட அதே நேரத்தில்தான் ஆர்.கே.நகரில் இந்த வினியோக மேளாவையும் செம ‘தில்’லாக நடத்தி முடித்திருக்கிறார்கள் ஆளும்கட்சியினர்.
திமுக இதையெல்லாம் எதிர்பார்த்தே இருந்தது. ‘நிச்சயம் பணம் வினியோகம் செய்யாமல் ஆளும்கட்சி இருக்கப் போவதில்லை. எனவே தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு அதிகம்’ என கருதியே ஸ்டாலின் தனது பிரசாரத்தைக்கூட கடைசி 3 நாட்கள் (17,18,19) வைத்துக்கொண்டார். ஆனால் கடந்த முறையைப் போல இந்த முறை ஆளும்கட்சி விஐபி.க்கள் யாரும் கணக்கு எழுதி வைத்து சிக்கிக் கொள்ளப் போவதில்லை. வருமான வரித்துறை கடந்த முறையைப் போல ரெய்டு நடத்துமா? என்பதும் தெரியவில்லை.
தமிழன் மானத்திற்கு அடிமைகள் கொடுக்கும் விலை ...ரூபாய் 6000 ...#RKNAGAR வாசிகள் விலை போவார்களா ???? ???
— T R B Rajaa (@TRBRajaa) December 16, 2017
ஆர்.கே.நகரில் சுழன்ற மொத்தப் பணமும் மணல் மாபியா மற்றும் சாராய சக்கரவர்த்திகளிடம் இருந்து ஒரே நாளில் திரண்டு வந்த தொகை என்கிறார்கள். ஒரு வேளை தேர்தல் நிறுத்தப்பட்டால், அடுத்த முறை ‘120 கோடி’ என்கிற ரெக்கார்டையும் உடைக்கத் தயாராகலாம் ஆளும்கட்சி! இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நேற்று மாலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், ‘தொகுதி முழுவதும் திமுக.வினரும் டிடிவி அணியினரும் அதிமுக கரை வேட்டிகளை கட்டிக்கொண்டு பண வினியோகத்தில் ஈடுபட்டதாக’ தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்ததுதான் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்!
ஒரு தொகுதி தேர்தலைக் கூட ஒழுங்காகக் கண்காணித்து நடத்த இயலாத தேர்தல் ஆணையம், அரசாங்கம் வெட்கித் தலை குணிய வேண்டும்... ராஜினாமா செய்ய வேண்டும்.. இல்லைனா ஆட்சி கலைய வேண்டும் #RKNagar
— இளா (@elanasi) December 17, 2017
நீதியை நிலைநாட்ட வேண்டிய தேர்தல் ஆணையம், தனது அணுகுமுறைகளில் கட்சிக்கு ஒரு நீதி வைக்கிறது. மக்கள், ‘நாங்க எல்லாக் கட்சிகளிடமும் பணம் வாங்கலையே! கொள்ளையடித்த கட்சிகளிடம் மட்டும்தானே எதிர்பார்க்கிறோம்’ என்கிறார்கள். அரசியலின் ஆகப் பெரிய நோக்கம், திருட்டு என்றாகிவிட்டபிறகு இதையெல்லாம் மாற்றுவது அவ்வளவு சுலபமா?
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக புகார் மனு.
ஆர்.கே.நகரில் அதிமுக கரை வேட்டி மற்றும் இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு திமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக மதுசூதனன் புகார்.#RKNagarByPoll #RKnagarByElection— Hari Prabhakaran (@Hariadmk) December 17, 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.