ஆர்.கே.நகரில் எகிறிய வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பண சப்ளைதான் இதற்கு காரணமா? என விவாதிக்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (டிசம்பர் 21) நடந்து முடிந்திருக்கிறது. 2,28000 வாக்காளர்களைக் கொண்ட ஆர்.கே.நகரில் 258 பூத்களில் வாக்குப் பதிவு நடந்தது. சராசரியாக ஒரு ‘பூத்’துக்கு 1000 வாக்காளர்களுக்கு குறைவாகவே வாக்களிக்க வேண்டியிருந்தது. எனவே தேர்தல் ஆணையம் அனுமதித்த மாலை 5 மணிக்குள் வாக்குப் பதிவு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆர்.கே.நகரில் அதற்கு விதிவிலக்காக மாலை 4 மணி வாக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக சில வாக்குச் சாவடிகளை முற்றுகையிட்டனர். எனவே வரிசையில் வந்து நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து பல வாக்குச் சாவடிகளில் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடந்தது.
எதிர்பார்த்ததைப் போல வாக்குப் பதிவு சதவிகிதம் ஆர்.கே.நகரில் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.68 சதவிகிதம் பதிவாகி இருக்கிறது. கடந்த (2016) பொதுத்தேர்தலில் இங்கு ஜெயலலிதா போட்டியிட்டபோது 69 சதவிகிதம்தான் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 2015 இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, 74.59 சதவிகிதம் பதிவானது. அதைவிடவும் தற்போது 3 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானால், ஆளும்கட்சி மீதான அதிருப்தியில் மக்கள் திரண்டு வந்து வாக்களித்ததாக அர்த்தப்படுத்துவார்கள். இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளும்கட்சி மிரண்ட காலகட்டம் அது!
ஆனால் சாத்தான்குளம், திருமங்கலம் இடைத்தேர்தல்களுக்கு பிறகு, இடைத்தேர்தல் என்றால் மாநிலம் முழுவதும் உள்ள ஆளும்கட்சி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட தொகுதி மக்கள் என பலரும் குஷியாகிவிடுகிறார்கள். பணம் சப்ளையைப் பொறுத்து வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகரிப்பதையும் இடைத் தேர்தல்களில் கவனித்து வருகிறோம்.
அந்த அடிப்படையிலேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வாக்குப் பதிவு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இங்கு ஆளும்கட்சி தரப்பில் ஓட்டுக்கு 6000 ரூபாய் வீதம் வினியோகித்திருப்பது களத்தில் நன்றாகவே வேலை செய்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். கடைசி நேரத்தில் டிடிவி தினகரன் தரப்பு நூதனமான புதிய முறைகளை கையாண்டு செய்த பட்டுவாடாவும், இரண்டு சதவிகித வாக்குகளை அதிகப்படுத்தியிருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எனவே வழக்கத்தைவிட அதிகமாக பதிவான 7 அல்லது 8 சதவிகித வாக்குகளை அதிமுக.வும், டிடிவி தினகரனும் பங்கு போடுவார்கள் என கணிக்கப்படுகிறது. ஆனால் திமுக தரப்பு இன்னொரு வாதத்தை முன்வைக்கிறது. ‘எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு நீதிமன்ற உத்தரவுப்படி 40,000 போலி வாக்காளர்களை நீக்க திமுக நடவடிக்கை எடுத்தது.
அந்தப் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதுதான், வாக்கு சதவிகிதம் அதிகரிக்க காரணம்! எனவே இது திமுக.வுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்’ என்கிறார்கள், திமுக தரப்பில்!
இந்த முறை வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்த சூழலில்கூட, ஏதாவது ஒரு தரப்பு பெருந்தொகையுடன் தங்களைத் தேடி வரலாம் என வாக்காளர்களில் ஒரு தரப்பு எதிர்பார்த்திருந்ததாம். அவர்களே மாலை வரை வாக்காளிக்காமல் வீடுகளில் காத்திருந்ததாக கூறுகிறார்கள்.
ஆனால் முன் தினம் இரவு வரை நடத்திய பட்டுவாடாவுடன் கட்சிகள் நிறுத்திக் கொண்டதால், சற்று ஏமாற்றத்துடன் மாலையில் சென்று வாக்களித்தார்களாம் இவர்கள்! தமிழகத்தில் இந்த பார்முலா இப்போதைக்கு நிற்கும் அறிகுறி இல்லை.