ஆர்.கே.நகரில் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம் மூலமாக தனது பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரே மேடையில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. இங்கு திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரசாரம் செய்து வருகிறார்கள். சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் மும்முரமாக பிரசாரம் செய்கிறார்.
ஆர்.கே.நகர் திமுக வேட்பாளரான மருது கணேஷுக்கு அவரே கடந்த சில நாட்களாக வீதி வீதியாக பிரசாரம் செய்தார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று (டிசம்பர் 11) மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் மேடையில் ஒன்றாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தின் Live Updates
இரவு 9.10 : மருது கணேஷை நீங்கள் தேர்வு செய்து அவர் முறையாக பணி செய்யாவிட்டால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்களே நடவடிக்கை எடுப்போம் - மு.க.ஸ்டாலின். இரவு 9.15 மணிக்கு கூட்டம் முடிந்தது.
இரவு 9.07 : இரு நாட்களுக்கு முன்பு சேகர் ரெட்டி டைரி வெளியானது. அதில், ‘பெரியவர்’! பெரியவர் என்றால், ஓபிஎஸ்! இது சிபிஐ.யிடம் சிக்கிய டைரி! இதைவிட கொடுமை என்ன இருக்கிறது. எனவே இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட மருது கனேஷுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்
இரவு 9.05 : ஆளுனர் தலையீடு குறித்து அண்ணன் வைகோ இங்கு பேசினார். ஆளுனரின் இந்த தலையீடு தொடர்ந்தால், ஆளுனர் ஆய்வுக்கு செல்லும் மாவட்டங்களில் திமுக போராட்டம் நடத்தும் என அறிவித்திருக்கிறேன். ஆளுனர் பதவியை நாங்கள் மதிக்கிறோம். அது வேறு! நாளை மறுநாள் கூட தமிழக பிரச்னைகள் குறித்து பேச ஆளுனரின் ‘அப்பாய்ன்மெண்ட்’ கேட்டிருக்கிறேன்’ : மு.க.ஸ்டாலின்
இரவு 9.00 : இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துகிறார்கள். நான் எம்.ஜி.ஆர். ரசிகன். அதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் கன்னியாகுமரியில் இன்னலுக்கு உள்ளாகும் மீனவர்களை சென்று சந்தித்தீர்களா? - மு.க.ஸ்டாலின்
இரவு 8.57 : ‘ஆர்.கே.நகரில் அதிமுக எம்.பி. வெங்கடேஷ் பாபு தலைமையில் வீடு வீடாக டோக்கன் வழங்குகிறார்கள். ஸ்கூட்டி தருவதாக சொல்கிறார்கள். அது ஜெயலலிதா அறிவித்த திட்டம். அதற்கு இந்த அரசு நிதியே ஒதுக்கவில்லை. ஆனால் தேர்தல் விதிமுறையை மீறி இப்படி வினியோகம் செய்கிறார்கள். இதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம்’ - மு.க.ஸ்டாலின்
இரவு 8.55 : ’அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ‘நாங்கள் இணைவதற்காகவே இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். இதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது?’ - மு.க.ஸ்டாலின்
இரவு 8.50 : ‘இரட்டை இலை அவர்களுக்கு கிடைத்ததால், நாங்கள் கவலைப்படவில்லை. இரட்டை இலையில் நின்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரையே தோற்கடித்திருக்கிறோம். இரட்டை இலை சில இடங்களில் டெப்பாசிட் இழந்திருக்கிறது’ - மு.க.ஸ்டாலின்
இரவு 8.40 : ‘அப்பல்லோவில் இந்தக் கூட்டாளிகள்தானே இருந்தார்கள். இப்போது இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இவர்கள் மூன்று குழல் துப்பாக்கிகள், இன்னொரு குழல், சசிகலா.’ : மு.க.ஸ்டாலின்
இரவு 8.35 : ‘நமக்கு எதிரானவர்களின் மேடை எப்படி இருக்கிறது? டெல்லியில் இருக்கிறவர்கள் போடுகிற மேடையில்தான் இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் தோன்றுகிறார்கள். இன்னொருவர் சுயேட்சையாக நிற்கிறார். அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் தமிழகத்தை சூறையாடியதில் அவர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது’ - ஸ்டாலின்
இரவு 8.30 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையை ஆரம்பித்தார். ‘கடந்த காலங்களில் நமக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள். அதனால் ஏற்பட்ட காயங்களை மறந்து, மத்திய-மாநில அரசுகளின் அநீதியில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் இணைந்திருக்கிறோம். இது ஒரு தொடக்கம். இந்த தொடக்கம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடரவேண்டும். தமிழக மக்கள் அனைவரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே இது தொடரும்... தொடரும் என ஆயிரம் முறை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.
இரவு 7.30 : வைகோ பேசுகையில், ‘மருது கணேஷ் இங்கு வெற்றி பெறுவது போல, கோட்டையில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும். இன்று போல ஸ்டாலினை, ‘ மாண்புமிகு தளபதி ஸ்டாலின்’ என நான் அழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .’ என்றார். தொடர்ந்து, ஆட்சி நிர்வாகத்தில் ஆளுனரின் தலையீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இரவு 7.20 : பெரியார், அண்ணாவுக்கு பிறகு திராவிட இயக்கத்தை கட்டிக் காத்தவர் கலைஞர் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இரவு 7.15 :‘மத்திய மதவாத ஆட்சிக்கு இபிஸ் தலைமையிலான ஆட்சி தமிழக ஆட்சி காவடி தூக்குகிறது.’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.
இரவு 7.10 : மத்திய அரசுக்கு அடிமை ஆட்சி இங்கு நடப்பதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
மாலை 7.00 : கொங்கு தேசிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், ‘கன்னியாகுமரி மீனவர்களை பற்றி கவலைப்படாமல் முதல்வரும் துணை முதல்வரும் இங்கு சுற்றுகிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை இவர்களால் கூற முடியவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உண்மை தெரிய வேண்டுமானால், இங்கு திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஜெயிக்க வேண்டும்’ என்றார்.
மாலை 6.30 : மேடையில் ஸ்டாலினுக்கு இடதுபுறம் வைகோவும், வலதுபுறம் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரும் அமர்ந்தனர். வைகோவின் இன்னொரு புறம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அமர்ந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.