ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கடந்த 11 மாதங்களாக சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தலும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஆர்.கே நகர்த் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இடைத்தேர்தல் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ஆர்.கே நகர்த் தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசு மற்றும தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினரோ அல்லது பொதுமக்களோ சுவர் விளம்பரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் அங்கு 5 முனை போட்டி உருவாகியுள்ளது. தேமுதிக இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி,பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இதுவரை தங்களது முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகரில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீதிகளில் தற்காலிகமாக பூத் அமைக்கவும், வீதிகளில் கட்சியினர் அமரவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஆர்.கே.நகரில் இரவு 10 மணி வரை வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்க அனுமதியுண்டு. ஆனால், இன்று வெளியிட்டுள்ள உத்தரவின்படி, மாலை 5 மணியிலிருந்து, இரவு 10 மணி வரை, வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய முடியாது. மறுநாள் காலை 9 மணி வரை, வேட்பாளர்களுக்கு இந்த தடை உத்தரவு தொடரும். காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே, வேட்பாளர்களால் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய முடியும்.
பொதுவாக, வாக்காளர்களுக்கு காலையும், மாலையும் தான் அந்தந்த கட்சிகள் மூலம் பணப்பட்டுவாடா செய்வது வழக்கம். அதிகாரிகள் பார்வையில் இருந்து தப்பிக்கவே இந்த யுக்தியை காலங்காலமாக கட்சிகள் பின்பற்றி வந்தன. ஆனால், இப்போது மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 9 மணி வரை வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதால், கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.