'தினகரன் ஏமாற்றிவிட்டார்'! - 20 ரூபாய் நோட்டை காட்டி ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்!

20 ரூபாய் நோட்டை காட்டி ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களர்களுக்கு 20 ரூபாயை டோக்கன் போல வழங்கி, தேர்தலுக்கு பின்னர் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், டிடிவி.தினகரன் கோடை வெயில் காரணமாக ஆர்.கே நகர் பகுதி மக்களுக்காக தண்ணீர் பந்தலை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார். அங்கு பொதுமக்கள் சிலர், 20வது ரூபாய் நோட்டை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஓட்டு வாங்குவதற்காக பணம் கொடுப்பதாக கூறி டிடிவி ஏமாற்றி விட்டார் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தினகரனை முற்றுகையிட சென்றவர்களை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கிருந்து புறப்பட்ட தினகரன், காசிமேடு பகுதியில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘இந்த போராட்டத்தை செய்தது மதுசூதனனின் ஆட்கள் தான். அவர்களின் தோல்வியை மறைக்கவும், மக்களை கேவலபடுத்த முயற்சிக்கின்றனர். மேலும், நாங்கள் பணம் தருவதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை 20 ரூபாய் நோட்டும் தரவில்லை. இந்த விவகாரத்தில் காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் பதில் அடி கொடுக்க நேரிடும்’ என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close