சாலை மேம்பாடு டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய மனு - சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ்

சாலைகளை பராமரிப்பது, மேம்படுத்துவது தொடர்பான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி மனுவிற்கு பதில் அளிக்க சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பேருந்துகள் செல்லும் சாலைகளை பராமரிப்பது, மேம்படுத்துவது தொடர்பான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி மனுவிற்கு பதில் அளிக்கும் படி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மணலியை சேர்ந்த மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் பேருந்துகள் செல்லும் உட்புற சாலைகளை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சென்னை மாநகராட்சி, 2017 டிசம்பர் மாதம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் 7 பணிகளுக்கான இந்த டெண்டர், இ- டெண்டர் முறையில் நடைபெறும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. டெண்டர் கோருவதற்கான கால வரம்பு கடந்த ஆண்டு டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 எனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வளவு குறுகிய கால அவகாசம் என்பது வெளிப்படையான டெண்டர் நடைமுறைகளுக்கு எதிரானது.

டெண்டரில் கூறப்பட்டுள்ள 7 பணிகளுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை. பொதுவாக டெண்டர் கோருவதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை இந்த டெண்டரில் பின்பற்றப்படவில்லை.

டெண்டர் திறக்கப்படுவது மாநகராட்சி பேருந்து சாலை துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்தான் நடைபெறும். ஆனால் அந்தந்த மண்டல அலுவலகத்தில் டெண்டர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் எப்படி பல மண்டலங்களுக்கு செல்ல முடியும். இவ்வளவு குளறுபடிகளுக்கும் இடையே சம்மந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து விபரம் கேட்டால், துவக்க விலையிலிருந்து 20 முதல் 40 சதவீதம் வரை தொகையை உயர்த்தி டெண்டர் கோரினால்தான் டெண்டர் கிடைக்கும் என்று வாய்மொழியாக தெரிவித்தார். இதனால் மாநகராட்சிக்கு கடுமையான இழப்பு ஏற்படும். இந்நிலையில் குறிப்பிட்ட தேதியில் டெண்டரை திறக்காமல் வைத்துள்ளனர். எனவே, வெளிப்படைத் தன்மை இல்லாத, மாநகராட்சிக்கு அதிக இழப்பை ஏற்படுத்தும் இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்த்து. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, மனு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை பொறியாளர்கள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

×Close
×Close