பிரபல ரவுடி ராக்கெட் ராஜா வெளிநாடு தப்பி செல்ல முயன்றபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திருநெல்வேலி போலீசாரால் கடந்த 7ஆம் தேதியன்று மடக்கி பிடிக்கப்பட்டார்.
யார் இந்த ராக்கெட் ராஜா
தமிழ்நாட்டின் தென் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடி என்ற ஊரைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது பல்வேறு கொலை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில் ராக்கெட் ராஜா, பனங்காட்டு படை என்ற கட்சியை நிறுவினார். இந்தக் கட்சியின் சார்பாக நடமாடும் நகைக் கடை என்று வர்ணிக்கப்பட்ட ஹரி நாடார் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
இதில் கணிசமான வாக்குகள் பெற்ற ஹரி நாடார் மூன்றாம் இடத்துக்கு வந்தார். தொகுதியை அதிமுக கைப்பற்றிய நிலையில் திமுகவுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.
திமுகவின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தோற்கடிக்கப்பட்டார். இந்த நிலையில், ஹரி நாடார் வழக்கு ஒன்றில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹரி நாடார் நீக்கம்?
தொடர்ந்து ராக்கெட் ராஜா, ஹரி நாடாரை கட்சியை விட்டு நீக்கினார் என்றும் அவருடன் நட்பை முறித்துக் கொண்டார் என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து இருவரும் நட்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும் ராக்கெட் ராஜா, தொடர்ந்து போலீசாருக்கு தண்ணீர் காட்டியபடி மறைந்து வாழ்ந்து வந்தார். அவர் மும்பையில் இருப்பதாக மட்டும் போலீசாருக்கு தெரியவந்தது.
நாங்குநேரி அருகே கொலை
இந்த நிலையில்தான் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி நாங்குநேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமி துரை என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவத்தில் ராக்கெட் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராக்கெட் ராஜாவை பிடிக்க போலீசார் பொறி வைத்தனர்.
விமான நிலையத்தில் சிக்கினார்
இந்த நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீசார் ராக்கெட் ராஜாவை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி அழைத்து வரப்பட்டார்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே கொலை, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கைது செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைந்தார். அதன்பேரில் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராக்கெட் ராஜா திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் மும்பையில்தான் பெரும்பாலான நாள்கள் வசித்துவந்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ராக்கெட் ராஜாவை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
ராக்கெட் ராஜா தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.