சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரோகினி பாஜிபாகரே. சேலம் மாவட்டம் இதுவரை 171 மாவட்ட ஆட்சியர்களைப் பார்த்துள்ளது. அதில், 170 மாவட்ட ஆட்சியர்கள் ஆண்கள் தான். இந்நிலையில், 171-வது மாவட்ட ஆட்சியராக கடந்த 28-ஆம் தேதி பொறுப்பேற்ற ரோகிணி தான், அம்மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் சம்பத். தற்போது அவர் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக சென்னைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ரோகிணி, சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்ற அன்றைய நாளே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கான வசதிகள் எல்லாம் முறையாக செய்யப்பட்டுள்ளனவா, எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் மனுக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவா என்பதை குறித்தும் அதிரடியாக ஆய்வு செய்தார். மேலும், அங்கு மாற்றுத் திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அவர்களுக்காக மேலும் கூடுதல் நாற்காலிகள், மாற்றுத்திறனாளி உதவி சாதனங்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை விசாரிக்கையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி தரையில் அமர்ந்து விசாரித்தது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆட்சியராக பொறுப்பேற்ற அன்றைய தினம், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ரோகிணி அளித்த பேட்டியில், “மாற்றுத்திறனாளிகளின் குறைகள், மாவட்டத்தில் உள்ள சுகாதார பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த உள்ளேன்”, என தெரிவித்தார்.
மேலும், வாழப்பாடி அருகே கீரிப்பட்டி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக தீண்டாமை கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, தீவிர விசாரணை செய்த பிறகு அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மஹராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரோகிணி விவசாயி மகள் ஆவார். அரசு பள்ளியில் படித்த இவர் பொறியியல் பட்டதாரி. கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ரோகிணி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் துணை ஆட்சியராக ஆட்சிப்பணியை தொடர்ந்தார். இதையடுத்து, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநராகவும், கூடுதல் ஆட்சியராகவும் பதவி வகித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.