தமிழக காங்கிரஸில் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் காத்திருக்க, எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கு ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து சந்தித்திருக்கிறார் ராகுல்!
ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு மாநிலம் வாரியாக கட்சிப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். தமிழகத்தில் இருந்து மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ ஆகியோரை மட்டும் ஒருமுறை அழைத்துப் பேசினார்.
தொடர்ந்து முன்னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் எம்.பி.க்கள் என பலரும் ராகுலை சந்திக்க வாரம் தவறாமல் டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸில் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளில் இருக்கும் பலரும் படையெடுப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்குவது இவர்களின் ஒரு இலக்கு! ஒருவேளை மாநிலத் தலைவரை மாற்றினால், அந்த இடத்தை பிடிப்பது அடுத்த இலக்கு!
ஆனாலும் கோஷ்டிப் பிரச்னைகளை கேட்டு புளித்துப் போன ராகுல், ‘அப்பாய்ன்மென்ட்’களை தவிர்த்தே வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக தமிழக காங்கிரஸில் இருந்து ஒரே ஒருவருக்கு மட்டும் பிப்ரவரி 7-ம் தேதி ராகுல் காந்தியின் ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டது. அவர், ராயபுரம் மனோ!
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக சுமார் 15 ஆண்டுகளாக இருந்த மனோ, ஓராண்டுக்கு முன்பே அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பதவியை ராஜினாமா செய்வதாக அப்போது கூறினார் மனோ. அதன்பிறகு பதவியில் இல்லாவிட்டாலும், இந்திரா காந்தி பிறந்த நாள், சோனியா காந்தி பிறந்த நாள், கட்சி தொடக்க நாள் என ஒரு விசேஷம் விடாமல் தனது ஏற்பாட்டில் நிகழ்ச்சிகளை நடத்துவதை தொடர்ந்தார் மனோ!
அண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு, மகாத்மா காந்தி பெயரில் விருதும் பொற்கிழியும் வழங்கி கவுரவித்தார். இப்படி நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை, காங்கிரஸ் தேசிய தலைமைக்கும் அனுப்பி வைத்தார் ராயபுரம் மனோ! இதற்கு கைமேல் பலன்தான் இவருக்கு மட்டும், கடந்த 7-ம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் கொடுத்த அப்பாய்ன்மென்ட்!
வட சென்னையில் தனது கட்சிப் பணிகள் தொடர்பான ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றிருந்த மனோவிடம், அவற்றை பார்த்து பாராட்டு தெரிவித்தார் ராகுல்! தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச்சு வந்தபோது, ‘பாஜக.வும், அதிமுக.வும் மிக பலவீனமான நிலையில் இருக்கின்றன. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு பலம் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்’ என மனோ கூறியதை கவனமாக கேட்டுக்கொண்டாராம் ராகுல்!
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசர் ஏற்கனவே வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதே கருத்தை மனோவும் வலியுறுத்தி பேசியிருக்கிறார். அதை ராகுல் தலையசைத்து கேட்டுக்கொண்டார். பதவியை எதிர்பாராமல் கட்சிப் பணிகளை செய்கிறவர்களுக்கு தனது ஆதரவும் ஊக்கமும் இருக்கும் என்பதை இதன் மூலமாக ராகுல் உணர்த்தியிருப்பதாகவே சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் உற்சாகம் கலந்து பேசுகிறார்கள்.
தொடர்ந்து வாரம் ஒருநாள் கட்சி அலுவலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் ராகுல் திட்டமிட்டிருக்கிறார். அதில் தமிழக நிர்வாகிகள் சிலருக்கும் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.