இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் துரத்தியடித்த காரணத்தால், படகுக்கு தலா ரூ.50.000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
சில சமயங்களில் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை, சுமார் 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீண்டும் கரை திரும்பியுள்ளனர். இதனால், படகிற்கு தலா ரூ.50,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.