அரசுப் பள்ளியில் ஒரு முன்னுதாரண ஆசிரியர் : ரூபி டீச்சரின் வெற்றிக் கதை

ஆசிரியர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால் பாடத்திட்டம், பள்ளிக்கும், மாணவர்களின் வெற்றிக்கும் துளி கூட சம்பந்தமில்லை

நீட் தேர்வு, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் குறித்து அதிக விவாதம் எழுந்துள்ள இந்த காலகட்டத்தில், நாம் எப்போதும் எதிர்கொள்பவை இவையாகத் தான் இருக்கும். “சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தான் சிறந்தது”, “மாநில கல்வி தரமானது இல்லை”, “அரசு பள்ளிகளில் நன்றாக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்”, “தமிழ் வழிக்கல்வி வாழ்க்கைக்கு பயன்படாது” என்பதே. ஆனால், “ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால் பாடத்திட்டம், படிக்கும் பள்ளி இவற்றுக்கும், மாணவர்களின் வெற்றிக்கும் துளி கூட சம்பந்தமில்லை”, என்பதுதான் ரூபி டீச்சரின் கூற்று.

ரூபி டீச்சர் தன் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமல்ல, எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். மாணவர்களுக்கும் ஏன் பல சமயங்களில் பெற்றோர்களையே மிரள செய்யும் பாடம் கணக்கு. அதனை மாணவர்களுக்கு எளிதில், புதுமையான, வித்தியாசமான செயல்முறை விளக்கங்களுடன் விளக்கும் ரூபி டீச்சரின், வீடியோக்கள் யுடியூபில் பயங்கர ஹிட்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரூபி கேத்தரின் தெரசா. கடந்த 30 ஆண்டுகளாக ஆசிரியராக அனுபவம் பெற்றவர். வாய்ப்பாடு முதல் 10, 12-ஆம் மாணவர்கள் சிரமப்படும் தேற்றங்கள், கணக்கு பாடங்களையும் புதுவிதமான முறையில் சொல்லிக் கொடுத்து அதனை அவர்களின் மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர் ரூபி.

மாணவர்களுக்கு இம்மாதிரி செயல்முறை விளக்கத்துடன் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது அது அவர்களுடைய மனதில் இருந்து எப்போதும் விலகுவதில்லை. இவருக்கு இம்மாதிரியான புதுவித ஐடியாக்களுடன் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு ஆசிரியர் ரூபி என்ன சொன்னார் தெரியுமா?

“கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறேன். அங்கு படிக்கும் மாணவர்களின் பொருளாதார நிலைமை, குடும்ப பின்னணி என்னை மிகவும் பாதித்தது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவர்கள் படிக்க வருவதே அரிது. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் வெற்றியடைய வேண்டும். அதனால் தான் கணக்கு பாடத்தை எளிமையாக சொல்லிக் கொடுத்து புரிய வைக்க வேண்டும் என நினைத்தேன்.”, என்கிறார் ஆசிரியர் ரூபி.

திருச்செங்கோட்டில் உள்ள மற்றொரு அரசு பள்ளியில் பணிபுரியும்போது அப்பள்ளியில் தரமான கட்டடம், வகுப்பறை கூட இல்லை. மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவு என்பதால் அவர்களை தன் அருகிலேயே அமரவைத்து வாய்ப்பாட்டை எளிமையான முறையில் கற்றுக் கொடுத்திருக்கிறார். மாணவர்கள் செம்ம குஷியாகி இருக்கின்றனர். அன்றைக்கு தான் சொல்லிக் கொடுத்ததை செல்ஃபோனில் வீடியோவாக எடுத்து யுடியூபில் பதிவேற்றம் செய்தார் ஆசிரியர் ரூபி.

அப்படித்தான் ஆரம்பித்தது மாணவர்களை மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்ய வைக்காமல், அவர்களை ஆர்வத்துடன் கணக்கு பாடம் கற்க வைப்பதற்கான ரூபி டீச்சரின் பயணம்.

அதன்பின், அதன்பின், கணக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் பகிரும் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்திருக்கிறார் ஆசிரியர் ரூபி. அதில், தன்னுடைய வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். அதனை பல ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். பின்னர், தன் மகனின் உதவியுடன் யுடியூபில் Rubi Theresa என்ற பெயரில் சேனல் ஆரம்பித்து அதில் வீடியோக்களை பதிவேற்றம் செய்தார். இப்போது, யுடியூபில் சுமார் 550 வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன.

அவருடைய வீடியோக்கள் பலவற்றை கோடிக்கணக்கான பேர் பார்த்திருக்கின்றனர். அவற்றில் அதிகமாக சுமார் 6 கோடி பேரால் பார்க்கப்பட்ட வீடியோ இது. இரண்டு இலக்க எண்களை எளிமையான முறையில் எப்படி பெருக்குவது என்று ஆசிரியர் ரூபி சொல்லித் தருவதை பாருங்கள்.

வாய்ப்பாடு மட்டுமல்ல, கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அடிப்படை கணக்கு துவங்கி தேற்றங்கள், சமன்பாடுகள், அளவியல் என 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களை கலங்கடிக்கும் கடினமான பிரிவுகளையும் பல்வேறு செயல்முறைகளில் விளக்கி அசத்துகிறார்.
அதுமட்டுமல்லாமல், rubitheresa.blogspot.in என்ற வலைப்பூவில் 10-ஆம் வகுப்பு பாடங்களை எளிமையான முறையிலும், rubi theresa-primary.blogspot.in-என்ற வலைப்பூவில் அடிப்படை கணக்குகளை எளிமையாகவும் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் பிபிடி வடிவம், அனிமேஷன் வடிவம் என கணக்கு பாடத்தை சொல்லிக் கொடுத்த ஆசியர் ரூபியின் வீடியோக்களை கண்டு பல ஆசிரியர்கள் பாராட்ட துவங்கினர். அதையே அவர்களும் பின்பற்ற துவங்கினர். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், யுடியூப் என சமூக வலைத்தளங்களில் அதிகமாக, வகுப்பில் பாடம் நடத்தும் வீடியோக்களை பகிர்ந்தார். இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளிலிருந்தும், சமூக வலைத்தளங்களில் இவரது வீடியோக்களை பார்த்துவிட்டு இவரை பாராட்டியிருக்கின்றனர்.

“சமூக வலைத்தளங்களில் நான் பாடம் நடத்தும் வீடியோக்களை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பாராட்டியிருக்காங்க. அதில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், என்னை அமெரிக்கா வந்து பாடம் நடத்தணும்னு கேட்டாங்க. இன்னும் நெறைய பேரு ஆங்கிலத்தில் இம்மாதிரியான வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கன்னு சொல்லுவாங்க. ஆனால், ஆங்கிலத்தில் கணக்கு பாடத்தை புதுமையான முறையில் சொல்லித் தருவதற்கு நிறைய பேர் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நிறைய செல்ஃபோன் ’ஆப்’கள் இருக்கின்றன. தமிழில் இவ்வாறு சொல்லித் தருவதற்குத்தான் ஆட்கள் இல்லை.”, என கூறுகிறார் ஆசிரியர் ரூபி.

எல்லா மாணவர்களும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் புரிந்துகொள்வதில்லை. அதனால், ஆசிரியர் ரூபி ஒவ்வொரு மாணவரிடமும் தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஏற்றாற்போல் வித்தியாசமான செயல் வடிவங்களில் சொல்லிக் கொடுக்கிறார்.

“அவர்களுடைய சூழ்நிலையை உணர்ந்து அவர்களுக்கு ஏற்றாற்போல் அன்புடன் சொல்லித் தர வேண்டும். அன்புடன் மட்டுமே ஒரு மாணவருக்கு சொல்லித் தருவது கடினம் தான். ஆனால், அவர்களுக்கு அதுதான் தேவை”, என ஆசிரியர் ரூபி கூறுவது தாய்மொழி வழிக்கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்வதாக அமைகிறது.

பெரும்பாலான ஆசிரியர்கள் போல் மதிப்பெண்களை மட்டுமே மாணவர்களை நோக்கி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இல்லை. அதனால் தான், இம்மாதிரியான புதிய முறையை சொல்லிக்கொடுக்க அதிக நேரம் எடுத்தாலும், அவர்களுக்கு மனதில் பதிய வைப்பதுதான் முக்கியம் என ஆசிரியர் ரூபி இந்த முறையை கையாள்கிறார். “மாணவர்களுக்கு அடிப்படையே புரியாமல் மதிப்பெண்களை எடுத்து என்ன பயன்?”, என ஆசிரியர் ரூபி கேட்கும் கேள்வி, கல்வியின் பெயரால் இங்கு நடத்தப்படும் சந்தைக்குள் வியாபாரம் செய்யும் அனைவரையும் நோக்கி கேட்பதுபோல் உள்ளது.

மாணவர்களுக்கு எது பிடிக்குமோ அதன் வழியிலேயே சென்று அவர்களுக்கு கணிதத்தை புரிய வைப்பதற்காக கடுமையாக முயற்சிக்கும் ஆசிரியர் ரூபி, சினிமா பாடல்கள் மூலம் வாய்ப்பாட்டை சொல்லிக் கொடுக்கும் வீடியோ இவை.

”ஆலுமா, டோலுமா” பாடலை அடிப்படையாக வைத்து வாய்ப்பாடு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ரூபி.

”எனக்கு மிகப்பெரிய சந்தோஷமே பெற்றோர்களையும் பிள்ளைகளையும் இணைத்ததுதான். என் வீடியோக்களை பார்த்து அவர்கள் பிள்ளைகளுக்கு அமர்ந்து சொல்லிக் கொடுப்பார்கள். கணக்கை பார்த்து பெற்றோர்களும் பயப்படாமல் இம்மாதிரி புது முயற்சிகளுடன் அவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது டியூஷன் என்ற வார்த்தைக்கே இடமில்லை”, என்கிறார் ரூபி. ஆசிரியர் ரூபியின் rubi math என்ற செயலியை சமீபத்தில் தான் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு புதிய முயற்சிகளை உருவாக்குவது என்பது நாம் நினைக்கும் அளவு எளிமையானது அல்ல. பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தும் மாணவர்களுக்காக வேறு எப்படி சொல்லிக் கொடுக்கலாம் என்பதை யோசித்து புதியனவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்.

“என் மாணவர்கள் தான் என்னுடைய வெற்றிக்கு காரணம். அவர்கள் கேள்வி கேட்க கேட்கத்தான் நான் புதுசு புதுசா எதையாவது முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன். ஆசிரியர்கள் நமக்கு ஒன்னு தெரியலன்னா அதை ஒத்துக்கொள்வதற்கு தைரியம் வேண்டும். அதன்பிறகு அதுகுறித்து ஆய்வுகள் செய்து மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும். “முடியும் என்ற ஆசிரியரின் முயற்சி, முடியாது என்ற மாணவரின் தேர்ச்சி”, என்பதுதான் என்னுடைய தாரக மந்திரம்”, எனக்கூறும் ஆசிரியர் ரூபி பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

“நாம் வாங்கும் சம்பளத்துக்கு நலிவடைந்த மாணவர்களை வாழ்வில் முன்னேற்றுவதுதான் முக்கிய நோக்கமாக கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்”, என சொல்லும் ரூபி ஆசிரியர்களால் உயிர்ப்பெறும் அரசு பள்ளிகள்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பள்ளியில் அமர்ந்து பொழுதை போக்குபவர்கள் என்ற பொதுப்புத்தியை உடைப்பவர்களும் அரசுப்பள்ளி ஆசிரியர்களாகவே தான் இருக்கின்றனர். மாணவர்களுடனான உறவை பாடங்களைத் தாண்டி பிணைந்திருக்க செய்யும் இம்மாதிரியான ஆசிரியர்கள் தன் நமக்கு தேவை.

×Close
×Close