உடல்நிலை பற்றிய திடீர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதி, ட்விட்டரில் காட்சி தந்தார்.
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 26-ம் தேதி பிற்பகலில் இருந்து அனலாக ஒரு வதந்தி பரவியது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான வதந்திதான் அது! இதைத் தொடர்ந்து, ‘தலைவருக்கு என்னாச்சு?’ என கோபாலபுரம் இல்லத்திற்கும் அறிவாலயத்திற்கும் ஏக போன் கால்கள்!
வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக கடல் கடந்தும் இந்த வதந்தி றெக்கை கட்டியது. இதனால் திமுக மூத்த நிர்வாகிகளே திகைத்தனர். இந்த வதந்தி பரவிய வேளையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சொந்த வேலையாக சென்னைக்கு வெளியே இருந்ததாக கூறுகிறார்கள். அதனால் உடனடியாக கருணாநிதியை யாரும் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. இதுவே வதந்தியை இன்னும் வேகமாக பரவச் செய்தது.
ட்விட்டரில் காட்சி தந்த கருணாநிதி
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் காதுகளையும் இந்த வதந்தி எட்டியது. உடனே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பி, கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார் அவர். அங்கு கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்து நல்ல உடல்நலத்துடன் அவர் இருப்பதாக பேட்டி கொடுத்தார்.
சற்று நேரத்தில் ஸ்டாலினும் தகவல் கிடைத்து வந்து சேர்ந்தார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், செயற்குழு உறுப்பினர் ஆற்காடு வீராசாமி ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்தில் வந்து கருணாநிதியை சந்தித்தனர். அப்போது ஸ்டாலினும் உடன் இருந்தார். இவர்கள் மூவரும் கருணாநிதியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படம் இரவு 9 மணியளவில் கருணாநிதியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.
கடந்த காலங்களிலும் இதேபோல வதந்திகள் பரவிய வேளைகளில் கருணாநிதியே தன்னை சந்திக்க வரும் தொண்டர்களுடன் போட்டோ பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு பதற்றத்தை தணித்தது உண்டு. அதே பாணியில் இந்த முறையும் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சந்தித்த புகைப்படம்தான் உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
கருணாநிதியை பேராசிரியர் அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும் சந்தித்துவிட்டு வெளியே வரவும், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அங்கு வரவும் சரியாக இருந்தது. பிறகு அவரும் கருணாநிதியை சந்தித்துவிட்டு, ‘தலைவருக்கு இருந்த திருஷ்டி கழிந்தது. நூறாண்டுகளைக் கடந்தும் எங்கள் தலைவர் வாழ்வார்’ என குறிப்பிட்டார்.
கருணாநிதியைப் பற்றி வதந்தி பரவுவது இது முதல் முறையல்ல. பலமுறை இதுபோன்ற வதந்திகளை அவரே சிரித்து ரசித்திருக்கிறார். இப்போது உடல் நலமில்லாத சூழலிலும் அந்த வதந்திகள் பரப்பப்படுவது வேதனை! வதந்திகளை பரப்புகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் முழுக்க சிறப்பு காவல் படையினரை அவரவர் தலைமையகம் திரும்பும்படி ஒரு உத்தரவை செப்டம்பர் 26-ம் தேதி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்தே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாக சமூக விரோதிகள் வதந்தியை பற்ற வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.