காஞ்சீபுரம் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய பயணி! பணம் கொடுத்து அனுப்பி வைத்த போலீஸ்!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர், காஞ்சிபுரம் முருகன் கோயிலில் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

By: October 11, 2017, 8:28:29 AM

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கம். இதனால், நேற்றும்(செவ்வாய்) கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது கோயில் வாசலில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்.

கோயில் வாயிலில் தரையில் அமர்ந்திருந்த அந்த வெளிநாட்டுப் பயணி, தனது தொப்பியை வைத்து பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார். பக்தர்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். அப்போது அந்த வாலிபர் “நான் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும். என்னிடம் பணம் இல்லை. பண உதவி செய்யுங்கள்” என சைகை மூலம் வருவோர் போவோரிடம் தெரிவித்தார்.

இதனை பார்த்த சில பக்தர்கள் அவரது தொப்பியில் பணம் போட்டனர். இதுகுறித்து பக்தர்கள் சிலர், பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கோயிலுக்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த எவிக்மி என்பதும், அவரது ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால், பணத்தேவைக்காக கோயில் வாசலில் தான் பிச்சை எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

எவிக்மி சொல்வது உண்மை தானா என்பதை கண்டறிய அவரது பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை போலீசார் சரிபார்த்தனர். அவரிடம் அதுதொடர்பான முறையான ஆவணங்கள் இருந்தது. பின்பு போலீசார் அவரிடம் இதுபோன்று பிச்சை எடுக்கக்கூடாது என அறிவுரை கூறி சிறிதளவு பணம் கொடுத்தனர்.

தொடர்ந்து அவரை சென்னைக்கு ரயிலில் ஏற்றி விட்டு, தூதரக அதிகாரிகளை சந்திக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். கோயில் வாசலில் ரஷ்ய பயணி பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Russian tourist begs in kanchipuram temple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X