Russia's nuclear missile test explosion: ரஷ்யாவில் கடந்த வாரம் ஏவுகணை என்ஜின் வெடித்ததில் 5 ரஷ்ய அணு பொறியாளர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் ரஷ்யாவின் ரகசிய ஆயுத திட்டத்தைப் பற்றி சர்வதேச அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அணு உலை எதிர்பாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த வாரம் ஏவுகணை என்ஜின் வெடித்ததில் 5 ரஷ்ய அணு விஞ்ஞானிகள் பலியானார்கள். அவர்களது உடல் மாஸ்கோவிலிருந்து 370 கி.மீ தொலைவில் உள்ள அணு ஆயுத ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள சாரோவ்வில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களுடைய இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். ரஷ்ய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
ரஷ்ய அரசின் அணுசக்தி முகமை அணுசக்தி என்ஜினை சோதனை செய்ததாக கூறுகிறது ஆனால், அவர்கள் அதற்கு மேல் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்து, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரகம் முதலில் அறிவிக்கையில், வடமேற்கு ஆர்கஞ்சல்ஸ்க் பகுதியில் உள்ள நியோனொக்சா கிராமத்திற்கு அருகே கடற்படை ஆயுதப் பரிசோதனை பகுதியில் ஏவுகணை என்ஜின் வெடித்தது. அதில், அந்த நிறுவனத்தின் 5 ஊழியர்கள் பொதுமக்கள் 2 பேர் பலியானதாகவும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தது.
ரஷ்ய அரசின் காட்டுப்பாட்டில் செயல்படும் ரொசாடம் நியூக்ளியர் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவிக்கையில், கடந்த வார இறுதியில், நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர் பலியானதாகவும் மற்றவர்கள் 3 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தது. இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பொறியாளர்கள் ரொசாடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன் மூலம், இந்த ஏவுகணை என்ஜின் வெடிப்பில் 5 அணு விஞ்ஞானிகளுடன் மேலும் 3 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று கருதப்படுகிறது.
ரோசாட்டம் நிறுவனம் அறிவிக்கையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏவுகணை என்ஜினை கடலுக்குள் செலுத்தும் சோதனை செய்தபோது கடற்கரை பகுதிகளில்இருந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை என்ஜின் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ரஷ்ய அதிகாரிகள், ஒயிட் கடலில் உள்ள டிவினா வளைகுடா பகுதியில் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஒரு மாத காலத்துக்கு தடை செய்து அடைத்துள்ளது.
செவெரோட்வின்ஸ்க் நகர நிர்வாகம் தெரிவிக்கையில், கதிர்வீச்சு அளவு சுமார் ஒரு மணி நேரத்தில் 2 மைக்ரோசீவர்ட் என்ற அளவில் கதிர் வீச்சு உயர்ந்ததாகவும் அது அரை மணி நேரத்துக்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த கதிர்வீச்சு அளவு வியாழக்கிழமை மணிக்கு 0.1 மைக்ரோசீவர்ட் என இயல்பு நிலைக்கு வந்தது.
அவசர கால நடவடிக்கை அதிகாரிகள் அனைத்து தொழிலாளர்களும் ஜன்னல்களை பூட்டிக்கொண்டு வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், ரஷ்யா முன்னரே கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணை சோதனை செய்துள்ளது. ஆனால், கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது எது மாதிரியான அணு சக்தி பொறி என்பதை அவர்கள் விளக்கவில்லை.
ரஷ்யாவில் அணுசக்தி ஏவுகணை என்ஜின் பரிசோதனையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைகளைப் பற்றி மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஐ.இ.தமிழுக்கு பேசுகையில், “ரஷ்யாவில் 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. அப்போது உலகம் முழுவதும் ரஷ்யாவின் தொழில்நுட்பம் மோசம் என்று கூறி கைவிடத் தொடங்கினார்கள். அப்போது, 1988-இல் இந்தியாதான் ஓடிப்போய் கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்கள். ஓவ்வொரு முறையும், விபத்து நடக்கிற இடத்தில் எல்லாம் அந்த நாட்டின் கைவிடப்பட்ட தொழில்நுட்பத்தை தூக்கிவிடும் நாடாக இந்தியா உள்ளது. இதே மாதிரி, அமெரிக்காவில் ஜஸ்டினவ்ஸ் என ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் திவால் ஆகிவிட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து ஆறு அணு உலைகளை வாங்குவதற்கு இந்தியாதான் ஒப்பந்தம் போடுகிறது. அரிவா என்று ஒரு பிரெஞ்சு நிறுவனம் இதுவும் திவால் ஆகிவிட்டது. அதனிடமிருந்து 6 அணு உலைகள் வாங்கி மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்தாபூரில் அமைக்கப் போகிறார்கள். இதை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
அணு சக்தியும் மாணுட சமூகமும் ஒன்றாக வாழ முடியாது என்று நாம் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். அழிவிலிருந்துதான் அணுசக்தி பிறக்கிறது. அதனால், உலகம் முழுவதும் அணுசக்தியை கைவிடும்போது இந்தியா மட்டும் அணுசக்தியை கையில் வைத்திருப்பது சரியாக இருக்காது.
பொதுவாக ரஷ்யாவிடம் வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை. கூடங்குளத்தில் எடுத்துக்கொண்டால், கடந்த 5 ஆண்டுகளில் கூடங்குளம் முதல் அணு உலை 49 முறை பழுதடைந்திருக்கிறது. அதே போல, இரண்டாவது அணு உலை கடந்த 2 ஆண்டுகளில் 20 முறை பழுதடைந்திருக்கிறது. உலகத்தில் உள்ள மற்ற அணு உலைகள் எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுதடையும். ஆனால், இங்கே இத்தனை முறை பழுதடைந்திருக்கிறது. இது ஏன் நடக்கிறது என்ற வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதே போல, அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவருமான சுப.உதயகுமாரன் கூறுகையில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எல்லாம், அணு உலைகளை அறிவியல் தொழில்நுட்பத்தின் நவீன கோயில்கள் என்று கூறுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்த அணு உலைகள் எல்லாம் நவீன கல்லறைகள். செர்னோபில் அணு உலை விபத்து நடந்தது. கடந்த வாரம், அணுசக்தி ஏவுகணை என்ஜின் வெடித்ததைப் போல சின்ன சின்ன சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் அணு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதையெல்லாம் நாங்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த சம்பவங்கள் எல்லாம் நமக்கு ஒரு அபாய முன்னெச்சரிக்கை மணி. அதனால், இந்த அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அணுசக்தி அறிவியலையும் தவிர்ப்பதுதான் நல்லது.
நாம் அறிவியலுக்கோ தொழில்நுட்பத்துக்கோ எதிரானவர்கள் இல்லை. ஆனால், இவைகள் எல்லாம் தேவையற்ற தொழில்நுட்பம். நமக்கு மின்சாரம் தேவை. அதற்காக இயற்கை வழிகளில் காற்றாலைகளில் இருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் என பல வழிகளில் மின்சாரம் எடுக்க முடியும். ஆனால், அதையெல்லாம், விட்டுவிட்டு, மீண்டும் மீண்டும் ஆபத்து நிறைந்த செலவினம் அதிகமான இந்த அணு தொழில்நுட்பத்தில் போய்விழுவது ஆபத்தானது. அர்த்தமற்றது.
இப்போது நாம் வாங்குகிற ரஷ்ய தயாரிப்புகள் எல்லாமே பிரச்னைக்குரியது. ரஷ்யாவிடமிருந்து வாங்கிய மிக் ரக போர் விமானங்கள், சுக்கோய் ரக போர் விமானங்கள் எல்லாமே அங்கங்கே விழுந்துகொண்டிருக்கின்றன. அதே போல, ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான பணம் கொடுத்து அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நீர்மூழ்கி விமானம் தாங்கி கப்பல் வாங்கினோம். அதுவும் வேலை செய்யவில்லை. அதே போல, பழையபடி, ரஷ்யாவிடம் இருந்து கூடங்குளம் அணு உலை 1, 2 வாங்கினார்கள். அது ஒழுங்காக வேலை செய்யவில்லை. இதனைக் கேட்டால், அணு விஞ்ஞானிகள் நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இவர்கள் பாடம் படிப்பதற்கு நம்முடைய பிள்ளைகளா பலியாக வேண்டும்? ஒரு ஏழ்மையான நாட்டின் மக்களிடம் இருந்து வரிப்பணத்தை வாங்கி ரஷ்யாவிடம் கொடுத்து உதவாத பொருட்களை வாங்கிவைத்துக்கொண்டு நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம் படித்துக்கொண்டிருக்கிறோம் என்றால், அதற்குள் எங்கள் குடும்பங்கள் நிர்மூலமாகிவிடுமே என்ன செய்வது? ரஷ்யாவில் இப்போது நடந்திருப்பது ஒரு அபாய எச்சரிக்கை மணி. அதனால், கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை கட்டக் கூடாது. ரஷ்யாவிடம் இருந்து மேலும் அணு உலைகளை வாங்கி இந்தியாவின் பிற பகுதிகளில் நிர்மானிக்க கூடாது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.