Saathankualm custodial murders : சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்ஃபோன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பெனிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறியும் சில மணி நேரம் கூடுதலாக கடை திறந்து வைக்கப்பட்டதால் ஜெயராஜ் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து அவருடைய மகன் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். 19ம் தேதி இரவு அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கண்மூடித்தனமாக இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
20ம் தேதி கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்ட பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் முறையே 22ம் தேதி இரவு மற்றும் 23ம் தேதி காலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையங்களில் நடைபெறும் வன்முறைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக வைத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் தற்போது முக்கியத்துவம் கிடைத்து வருகிறது.
இது தொடர்பாக தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய திலகவதி ஐ.பி.எஸ்யிடம் போனில் பேசினோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இங்கே!
ஸ்ட்ரெஸ் மூலம் தான் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுகிறது என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஸ்ட்ரெஸ் இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் இது போன்ற இக்கட்டான சூழல்களிலும் எப்படி செயல்பட வேண்டும் என்ற பயிற்சியை பெற்ற பிறகு தான் அவர்கள் பணிக்கு வருகிறார்கள். அதனால் இதனை ஸ்ட்ரெஸ் என்று வகைமை செய்வது மிகவும் தவறு. சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இது போன்ற தவறுகளை எக்காரணம் கொண்டும் மன்னிக்க கூடாது.
இது போன்ற தாக்குதல்களுக்கு காரணம் என்ன?
மக்கள் தான். என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட் என்று கொண்டாடுகின்றோம். போலியான என்கவுண்டர்களை கொண்டாடுவது தான் காவல்துறையினருக்கு ஒரு உந்து சக்தியாக அமைகிறது. மற்ற மாநிலங்களில் இது போன்று என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று கூறப்பட்ட அதிகாரிகள் பலரும் பின்னாட்களில் பெரும் குற்றங்களுக்கு ஆளாகி சிறை தண்டனை பெற்று வந்த வரலாறும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட் என்ற கிரீடத்துடனே பதவியில் இருந்து ஓய்வு பெருகிறார்கள் அதிகாரிகள். நீதியை தானே கையில் எடுத்துக் கொள்ளும் காவலர்களை நாம் கொண்டாடுகின்றோம் அதன் விளைவாகவே இது போன்ற சிக்கல்களுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது.
இந்த கொண்டாட்டம் வெறுமனே நின்றுவிடாமல் அது அடுத்த கட்டமாக சினிமாக்களாக வருகின்ற போது மக்கள் இது போன்ற தாக்குதல்களை மிகவும் ”க்ளோரிஃபை” செய்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு துப்பாக்கியை வைத்து வில்லனை சுட்டுக் கொன்று விடுகிறார் காவல்த்துறை அதிகாரியாக நடிக்கும் நடிகர். இது போன்ற தவறான எண்ணங்களை மக்கள் மனதில் விதைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இன்றைய சினிமா.
இது போன்ற படங்கள் எப்படி தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ்களை பெறுகிறது என்பதே புரியவில்லை. ஊடகத்துறை, பத்திரிக்கைத்துறை என அனைத்தும் காவல்துறை பற்றி சாமானியனின் மனதில் ஒரு போலி பிம்பத்தை தோற்றுவித்துள்ளது. ஆனால் பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக காவல்துறையை மட்டும் குற்றம் சொல்வது. பொறுப்புகளையும் கடமைகளையும் உணராதவர்கள் காவல்துறையிலும் இருக்கிறார்கள். காவல்துறைக்கு வெளியிலும் உள்ளார்கள். அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பணியிடமாற்றம், பணியிடை நீக்கம், பணி நீக்கம் - இது தான் தீர்வா?
இது போன்ற வழக்குகளில் நம் சட்டத்தில் இருக்கும் “போதுமான ஆதாரங்கள் இல்லை, சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை” என்ற கூற்றுகளால் பலர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். துறைசார் நடவடிக்கைகள் என்ற பெயரில் அவர்களின் சம்பளம் குறைப்பு, ப்ரோமோசன் நிறுத்தி வைப்பு போன்ற அளவில் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
என்ன தண்டனை தர வேண்டும்?
எங்காவது ஒரு குற்றம் நடைபெற்று குற்றவாளி கண்டறியப்பட்டால் அவரின் குற்றத்திற்கு ஏற்ற வகையில் தண்டனை வழங்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் மக்களை பாதுகாக்க வேண்டிய, குற்றம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினரே இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் போது மற்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை விட அதிகமாக தண்டனைகளை தர வேண்டும்.
எமெர்ஜென்சி காலகட்டத்தின் போது கேரளாவில் நக்சலுடன் தொடர்பு கொண்டவர் என கல்லூரி மாணவன் ராஜன்* என்பவரை கைது செய்து காவல் நிலைய விசாரணையில் அவர் கொல்லப்பட்டார். அது தொடர்பாக ஜெயராம் படிக்கல் என்ற காவல்துறை அதிகாரிக்கு தண்டனை கிடைத்தது. சில காலம் அவர் சிறையில் இருந்தார்.
2005ம் ஆண்டு திருவனந்தபுரம் ஃபோர்ட் காவல் நிலையத்தில் ஏற்பட்ட உதயகுமார் மரணத்திற்கு மட்டும் தான் காவலர்கள் கே. ஜித்துகுமார், எஸ்.வி. ஸ்ரீகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதுவும் 2019ம் ஆண்டில் தான். தீர்ப்பினை எழுதிய நீதிபதி ஜே நாசர் “இந்த குற்றத்திற்கு மரண தண்டனை என்பது மிகவும் குறைவு” என்பதை மேற்கோள் காட்டியிருந்ததை நினைவு கூறினார் திலகவதி.
சாட்சியம் கூறிய ரேவதி குறித்து?
ஊடகங்கள் வாயிலாக நானும் அவர் குறித்து கேள்விப்பட்டேன். உயிருக்கு உத்தரவாதம் கொடுங்கள் இல்லையேல் சாட்சி கூற முடியாது என்று அவர் மறுபடியும் மறுபடியும் ஏன் கூற வேண்டும்? கொஞ்சம் கோபம் கூட வருகிறது. உண்மையை கூற ஏன் அவர் இவ்வளவு பயப்படுகிறார் என்று தான் புரியவில்லை.
மன அழுத்தத்திற்கு தரப்படும் கவுன்சிலிங் குறித்து?
இது ஒரு கண்துடைப்பு என்று தான் கூறுவேன். 19 வயதில் முறையான பயிற்சிகளை பெற்று ஒருவர் காவல்துறைக்கு வருகிறார் என வைத்துக் கொள்வோம். அக்காலத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து பயிற்சிகளையும் 58 வயது வரை நினைவில் கொள்வாரா என்பது சந்தேகம் தான். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை நாங்கள் அவர்களுக்கு பயிற்சிகளும், கவுன்சிலிங்கும் தர வேண்டும் என்று வெகுநாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
தற்கொலைகளுக்கு முயற்சிக்கும் காவலர்களுக்கு வழங்கப்படும் கவுன்சிலிங்குகள் இதை விட பெரிய கண்துடைப்பாக இருக்கிறது. விடுமுறை, வேலைப்பளு, ஓய்வு, இடமாற்றம் தேவை என்பது போன்ற அழுத்தங்களால் அவர் ஏதேனும் விபரீத எண்ணங்களை வளர்த்திருப்பார். ஆனால் அவரை கவுன்சிலிங் என்று அழைத்துச் சென்று கதைகளையும், ஜோக்குகளையும் கூறி அவர்களுடைய வாழ்க்கையை மேலும் கேலிக்கு ஆளாக்குகிறார்கள். மனமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கவுன்சிலிங் ஏதும் வழங்கப்படுவதில்லை.
காவலர்கள் தரப்பு நியாயங்கள் ஏன் கேள்வி கேட்பார் அற்று இருக்கிறது?
காமராஜர் ஆட்சி காலத்தில் தான் காவல்துறை கக்கன் அவர்களின் கீழ் செயல்பட்டது. காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து பேச வாய்ப்புகளும், நேரமும் அப்போது சாத்தியமாக இருந்தது. ஆனால் ஏற்கனவே அதிக அளவில் பொறுப்புகளை வைத்திருக்கும் முதல்வரிடம் தற்போது காவல்துறை பொறுப்புகளும் உள்ளது. இதனால் எங்கள் தரப்பு நியாயங்களை கூறுவதில் பிரச்சனைகளும், நடைமுறை சிக்கல்களும் நிலவுவதும் கூட இதற்கு காரணமாக உள்ளது.
அரசின் கீழ், முதல்வரின் கீழ் செயல்படுகிறது காவல்துறை. ஆனால் இன்று சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயல் மூலம் ஒட்டுமொத்தமாக காவல்துறையினர் மீது நம்பிக்கையில்லை என்று அவர்களை மோசமான முன்னுதாரணமாக காட்டுவதும் பெரும் வேதனை அளிக்கிறது” என்று அறிவித்தார் திலகவதி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
பின்குறிப்பு : கயன்னா காவல் நிலைய தாக்குதலில் நக்சல்களுடன் தொடர்பில் உள்ளார் என்று 1976ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கடைசி ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த ராஜன் என்பவரை கைது செய்தது காவல்துறை. ஜெயராம் படிக்கல் என்ற காவல்துறை அதிகாரி மிகவும் மோசமாக, தாக்குதலுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தியதில் ராஜன் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். ஜெயராம் படிக்கல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டும் கூட அவர் சில நாட்கள் மட்டுமே சிறைவாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.அன்றைய கேரள முதல்வர் கே. கருணாகரனுடனான நட்பினால் ஜெயராமிற்கு அளிக்கப்பட்ட தண்டனையில் இருந்து அவர் தப்பித்துக் கொண்டார். ராஜனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராடினார் அவருடைய அப்பா டி.வி.எச்சரா வாரியர். தன் மகனை இழந்து வாடும் ஒரு அப்பாவின் வாழ்க்கையை, ராஜனின் மறைவிற்கு நீதி கிடைக்க போராடிய சம்பவங்களை ”ஒரு அச்சண்ட்ட ஓர்மகுறுப்புகள்” என்று மலையாளத்தில் புத்தகமாக எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.