சகாயம் ஐஏஎஸ்-க்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சகாயமிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சகாயமிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் கனிமவள முறைகேடு தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2014-ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிசான் கவுல், இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் மோசடிகள் குறித்து தீவிர விசாரணை நடத்திய அவர், சுமார் 1200 பக்கங்கள் கொண்ட அறிக்கையும், சுமார் 6000 பக்கங்கள் கொண்ட துணை ஆவணங்களையும் கடந்த 2015-ஆம் ஆண்டில் தாக்கல் செய்தார். அதில், கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடிக்குக் காரணமான மத்திய, மாநில அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையில் கனிம ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு விசுவாசமாகவே செயல்பட்டிருப்பதை தனது அறிக்கையில் சகாயம் தெரிவித்திருக்கிறார். ஏலம் எடுத்த இடத்தில் அதிகமான அளவிற்கு கிரானைட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அப்பாவிகள் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலையும் அந்த அறிக்கையில் அவர் பதிவு செய்திருக்கிறார். விசாரணை காலத்தின் போது, பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த போதும், கலங்காமல் உன்மையை வெளிக் கொண்டு வந்தவர் சகாயம்.

இதன்பின்னர், இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த இணைப்பு மனுவில், கடந்த 17 ஆண்டுகளில் 52 ஆயிரம் கோடி அளவு மட்டுமே வருமானம் ஈட்டப்பட்டுள்ள நிலையில், சகாயம் குழுவின் மதிப்பீடு தவறானது என்பதால், மத்திய அரசின் துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய தகுதியான மதிப்பீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சகாயம் குழுவில் இடம் பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தாரர் மீனாட்சி சுந்தரத்துக்கு 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கடந்த மாதம் சகாயம் குழு சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அமர்வு சகாயம் குழுவை கலைப்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது முடிவு எடுக்கப்படலாம் எனவும், சகாயம் குழுவிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும், குழு சமர்பிக்க வேண்டிய கூடுதல் ஆவணங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் உயர்நீதிமன்ற பதிவு துறையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும் அனைத்து உபகரணங்களையும் ஜூலை 31-ம் தேதிக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வின் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு அப்போது, சகாயம் குழு தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழுவின் ஆவணங்களை ஒப்படைக்க மேலும் கால அவகாசம் வேண்டும். விசாரணையில் பெறப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் வரிசைப்படுத்த கால அவகாசம் தேவை என கோரப்பட்டது.

விசாரணை தொடர்பாக, கடிதங்கள் மூலமாக இரண்டு முறையும் தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வந்துள்ளது. அதே போல் விசாரணைக்கு உதவியவர்களுக்கும் மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மிரட்டல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு உதவிய சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணைக்கு உதவிய பார்த்தசாரதி என்பவர் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், பிற விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணைக்காக வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தும், விசாரணை குழுவின் ஆவணங்களை தாக்கல் செய்ய வருகிற 31-ம் தேதி வரை காலம் அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close