டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் ரூ.1,900 முதல் ரூ.2,300 வரை கூடுதலாக பெறுவர். அதேநேரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஊக்கத்தொகை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நிறுவனத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் 2,830 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், 897 சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் உள்ளன. இவற்றில் தற்போது ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 7,203 மேற்பார்வையாளர்கள், 15,744 விற்பனையாளர்கள், 3,732 உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் செப்டம்பரில் இவர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது.
இதுதவிர, 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத்தொகை, மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, காப்புறுதி, பணிக்கொடை, குடும்ப சேம நலநிதி, கூடுதல் ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களும் சில்லறை விற்பனைப் பணியாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மாதமும், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் விற்பனை அதிகமாக இருந்தால் அதில் 1½ சதவீதத்தை எடுத்து சிறப்பாக விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு 70 சதவீதமும், குறிப்பிட்ட அந்த இலக்கை எட்ட முடியாத கடைகளுக்கு மீதமுள்ள 30 சதவீதத்தில் இருந்தும் ஊக்கத்தொகை பிரித்து வழங்கப்பட்டு வந்தது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் 37 சதவீதம் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான ஊக்கத்தொகையும், மீதமுள்ள 63 சதவீதம் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரையிலான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்த ஊக்கத்தொகை முறையில் முரண்பாடு இருக்கிறது என்று கூறி, அதனை களைய வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 19-ம் தேதி சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.தங்கமணி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகக் குழு கூட்டம் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடந்தது. இதில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார், மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதன்படி, கடை மேற்பார்வையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500-ல் இருந்து ரூ.9,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு ரூ.5,600-ல் இருந்து ரூ.7,500 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.4,200-ல் இருந்து ரூ.6,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.2,300 வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஊக்கத் தொகையை நிறுத்தவும் டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க (ஏஐடியுசி) மாநிலத் தலைவர் நா.பெரியசாமி கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் மானியக் கோரிக்கை முடிவில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தொகை ஊதிய உயர்வாக வழங்கப்படும். இதுதவிர மாதந்தோறும் விற்பனை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இது ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும். அதிக விற்பனை நடக்கும் இடங்களில் மட்டுமே ஊக்கத் தொகை கிடைத்து வந்தது. இதனால் ஊழியர்களுக்குள் போட்டியும் நிலவி வந்தது. இதற்கு பதில் மாதம் குறிப்பிட்ட தொகையை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கும்படி கோரிக்கை விடுத்தோம். இதன்படி, தற்போது ஊக்கத் தொகையானது ஊதிய உயர்வாக வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.