அரசை எதிர்த்தால் குண்டர் சட்டமா? மாணவி வளர்மதி ஆவேசம்

அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.

By: Updated: July 18, 2017, 06:55:03 PM

சேலம் மாவட்டம் வீராணத்தை அடுத்த வீமனூரைச் சேர்ந்தவர் வளர்மதி(25). இவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் படித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 12-ம் தேதி கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே “இயற்கை பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.

அந்த துண்டு பிரசுரத்தில் “மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக ஜூலை 15-ம் தேதி புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு துணை நிற்போம். மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை வெளியேற்று, ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்” என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து வளர்மதியையும், அவருடன் இருந்த ஜெயந்தி(48) என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். அவர் மீது, அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், வளர்மதி மீது சிதம்பரம், குளித்தலை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வளர்மதி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம், அவருடன் இருந்த ஜெயந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில், வளர்மதிக்கு வீராணத்தைச் சேர்ந்த நக்சலைட் பழனிவேலு, சேலத்தில் மத்திய அமைச்சர் மீது காலணி வீசிய வழக்கில் கைதான சாலமன் உள்ளிட்டோருடன் போராட்டரீதியாக தொடர்பு இருப்பது தெரியவந்தது. பொதுநல மக்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பில் அவர் உறுப்பினராகவும் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பல்வேறு வழக்குகள் இருப்பதால் வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் சேலம் பெண்கள் சிறையில் வைக்கப்படுவதில்லை என்பதால், கோவை மத்திய சிறைக்கு வளர்மதி கொண்டு செல்லப்பட்டார், அங்கு, குண்டர் சட்டத்தில் கைதான ஆணை அவருக்கு வழங்கப்பட்டது.

கைதான வளர்மதி கூறுகையில், “கல்லூரி மாணவியான என்னை மாவோயிஸ்டு என போலீசார் முத்திரை குத்துகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்தேன் என்பதற்காக என்னை கைது செய்துள்ளனர். சிறையில் அடைத்தாலும் அங்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.

வளர்மதியின் இந்த கைது சம்பவத்தை கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். கல்லூரி மாணவி வளர்மதியை விடுவிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் துரப்பணக் கிணறுகள் தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Salem student valarmathy arrested in gundar law section

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X