/indian-express-tamil/media/media_files/2025/10/24/agayathamarai-2025-10-24-17-53-24.jpg)
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் போதிய வடிகால் வசதி இல்லாத சம்பா ஒரு போக நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளதை கண்டித்தும், தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதை கண்டித்தும் திருவெறும்பூர்- கல்லணை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் குவளை வாய்க்காலில் தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வேங்கூர் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சம்பா ஒரு போக நடவு பயிர்களும், நாற்று பயிர் பயிர்களும், நேரடி விதைப்பு பயிர்களும் கடந்த மூன்று நாட்களாக தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றது.
குவளை வாய்க்காலில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததாலும், வாய்க்காலில் ஆகாயத்தாமரை அடைத்துக் கொண்டு தண்ணீரை வடிய விடாமல் தேக்குவதாலும், சம்பா ஒரு போக நெற்பயிர்கள் அழியும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் கடந்த ஒரு வார காலமாக வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டால் அவர் தொலைபேசி எடுப்பதில்லை என்றும், சரியான பதில்கள் சொல்லாமல் தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும் மேலும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டுவருவதாகவும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ் கே டி கார்த்தி தலைமை வகித்தார்.
இந்த மறியல் போராட்டத்தின் போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மின்வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தையும் போராட்டக்காரர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் பிடித்து வைத்திருந்த மின் ஊழியரின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற பொழுது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது.
இதில் மின்வாரிய ஊழியரை போராட்டக்காரர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்கு வந்த திருவெறும்பூர் போலீசார் அவர்களை சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் பொதுப்பணி துறை பொறியாளர் ராமேஸ்வரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் குவளை வாய்க்காலில் ஆகாயத்தாமரையால் ஏற்பட்டுள்ள அடைப்பை வாகனத்தைக் கொண்டு தூர்வாரி அப்புறப்படுத்தப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் திருவெறும்பூர் கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்த எஸ் கே டி கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "வேங்கூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக குவளை வாய்க்காலில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நடவு இளம் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த குவளை வாய்க்கால் திருச்சி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வடிகாலாக உள்ளது. இந்த குவளை வாய்க்கால் வடிகால் தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணை பகுதியில் செல்கிறது. குவளை வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் தூர் வாரும் பொழுது இந்த பகுதி விவசாயிகளை வைத்துக்கொண்டு தூர் வாருங்கள் என கூறியதற்கு உங்களை வைத்துக்கொண்டு தூர்வார வேண்டிய அவசியம் இல்லை என அப்பொழுது பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
தற்பொழுது ஆகாயத்தாமரை தேங்கியதால் கடந்த மூன்று நாட்கள் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பொதுமக்களின் வீடுகளையும் சுற்றிலும் வந்துள்ளது. நேற்று வேங்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கீழ முறுக்கூர் பாலம் மற்றும் வடிகால் குமுளி ஆகியவற்றில் குவிந்துள்ள ஆகாயத்தாமரையை தன்நெழுச்சியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர், ஆனால் அது முடியவில்லை ஆகாயத்தாமரை அடைத்து வருவதால் தண்ணீர் குவளை வாய்காலில் ஏறி வருகிறது. இது குறித்து பொதுப்பணித்துறையிடம் கேட்டபோது தங்களிடம் வாய்க்காலை தூர் வருவதற்கு நிதி இல்லை" என கூறினார்.
மேலும், துவாக்குடி மின் பொறியாளரை போனில் தொடர்பு கொண்டால் அவர்போனை எடுப்பதே இல்லை என்றும், அவரது போன் வேலை செய்யும் மறுக்கிறது என்றும், கடந்த ஒரு வார காலமாக நடராஜபுரம் அரசங்குடி, வேங்கூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தொடர்ந்து நான்கு மணி நேரம் 5 மணி நேரம் இல்லாமல் உள்ளது என்றும், நேற்று ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கு மாற்றாக வாழவந்தான் கோட்டையில் உள்ள மின்மாற்றிலிருந்து இந்த பகுதிக்கு மின் இணைப்பை மாற்றி கொடுத்தால் இந்த பகுதிக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். இந்த பகுதியில் உள்ள சாமிநாதபுரத்தில் புதிதாக கடந்த ஆண்டு மின்சார ட்ரான்ஸ்பார்மர் வைத்தனர், அதுவும் தற்பொழுது சாய்ந்துள்ளது எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us