சாரண,சாரணியர் இயக்க தேர்தலில் ஹெச்.ராஜாவுக்கு என்ன நிகழ்ந்ததோ அது தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வுக்கும், அதிமுக-வுக்கும் நிகழப் போகிறது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார்.
சாரணர் - சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் மணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த பதவிக்கு ஹெச்.ராஜா போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவர் போட்டியிடக் கூடாது என்ற எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால், சாரணர் சரணியர் இயக்கத்தில் நாங்கள் ஏற்க்கனவே ஈடுபட்டிருந்தலால், அந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பிற்கு மனு தாக்கல் செய்துள்ளேன் என ராஜா விளக்கமளித்தார்.
இந்த சூழலில் சாரணர்-சாரணியர் இயக்க தலைவர், துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு கடந்த 16-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினமே வெளியான அதன் முடிவுகளில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் மணியிடம் தோல்வியை தழுவினார். பதிவான 285 வாக்குகளில் 234 வாக்குகள் மணிக்கும், எஞ்சியுள்ள 51 வாக்குகள் ராஜாவுக்கும் விழுந்தன.
இந்நிலையில், சாரண,சாரணியர் இயக்கத்தில் ஹெச்.ராஜாவுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வுக்கும், அதிமுக-வுக்கும் நிகழப் போகிறது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார். மேலும், அதிமுக மூழ்கும் கப்பல். அதில் யாரும் பயணிக்க விரும்ப போவதில்லை எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சாரணர், சாரணியர் இயக்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. அதனால் இந்த தேர்தலை ஏற்க முடியாது என ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.