மூடப்பட்ட மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்

மூடப்பட்ட மணல் குவாரிகளை கூடிய விரைவில் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு துறையில் மிக ‘காஸ்ட்லியான’ துறை என்றால் அது பொதுப்பணித்துறை தான். தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் பொதுப்பணித்துறையே நேரடியாக ஏற்று நடத்தும் என்று, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி 2003ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போதில் இருந்து பணம் கொழிக்கும் துறையாக மாறிப் போனது பொதுப்பணித்துறை.

ஒரு லோடு மணலுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் விலை என்னவோ 650 தான். ஆனால், இதை விட பல பல மடங்கு அதிக தொகைக்கு மணல் விற்கப்படுகிறது. பூமிக்குள் தங்கப் புதையல் என்பது மாறிப் போய், மணலே தங்கமாக உருமாறியது. பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட, மணல் கொள்ளையர்களால் நடந்த கொலைகள் ஏராளம்.

இதைத் தொடர்ந்து தொடரப்பட்ட பல வழக்குகள் காரணமாக, சில மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், “தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரி திறக்கக்கூடாது. தேவைக்கேற்ப, வெளிநாட்டில் இருந்து மாநில அரசே மணலை இறக்குமதி செய்து விற்கலாம்” என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் தற்போது மணல் விற்பனை ஆன்-லைன் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மணல் கடத்தல் குறைந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் தொழிலக பயன்பாட்டுக்கான மணலாக உள்ளது. மாநில விதிக்குள் அது இல்லை. எனவே மணல் குவாரி மீதான தடையை விலக்க வேண்டும்” என்றது. இதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை கூடிய விரைவில் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியாரிடம் மணல் குவாரிகளை கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close