இந்தியாவே இதுவரை கண்டிராத சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு: தனிச் சட்டம் இயற்ற தலைவர்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் இதுபோன்ற சாதிய ஆணவ கொலை நடந்திருப்பது வெட்கக் கேடான விஷயம். நிச்சயம் இந்த தீர்ப்பு பயத்தை ஏற்படுத்தும்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.

இதில் சங்கர் உயிருக்குப் போராடி உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே இந்த ஆணவப் படுகொலை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவ்வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இதனை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜ், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்தார்.
மேலும் ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:

இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தமிழநாட்டில் இதுபோன்ற சாதிய ஆணவ கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. தீண்டாமைக்கு எதிராக பல தலைவர்கள் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்டுள்ளனர். அப்படிப்பட்ட தமிழகத்தில் இதுபோன்ற சாதிய ஆணவ கொலை நடந்திருப்பது வெட்கக் கேடான விஷயம். நிச்சயம் இந்த தீர்ப்பு பயத்தை ஏற்படுத்தும்.

பாலபாரதி – முன்னாள் எம்எல்ஏ – சிபிஎம்

பட்டப்பகலில் இந்த கொடூர கொலை நடந்தது. இந்த தண்டனையின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சாதிய ஆணவ படுகொலைகள் நடப்பது நிச்சயம் குறையும். இனி, சாதி மாற்ற திருமணம் குறித்து பாதுக்காக ஒரு குழு அமைக்க வேண்டும். இதற்கு முன்னர் இதுபோன்ற சாதிய ஆணவ கொலை வழக்கில் இப்படியொரு தண்டனையை தமிழ்நாடு சந்தித்ததில்லை. இன்னும் பல குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. புதிய வெளிச்சம் பாய்ந்துள்ளது. சாதிய மாற்று திருமணத்திற்கு இந்த வெளிச்சம் உதவும். சாதி மாறி திருமணம் செய்தவர்களை பாதுகாக்க ஒரு சட்டம் இயற்ற வேண்டும். இதன்மூலம், மென்மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடப்பது தடுக்கப்படும்.

எவிடன்ஸ் கதிர் – சமூக செயற்பாட்டாளர்

விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்வோம். எதிர் தரப்பிலும் மேல் முறையீடு செய்வார்கள். ஆனால், அவர்களுக்கு விடுதலை கிடைப்பது மிகவும் அரிது. ஏனெனில், அவர்கள் தங்களது பழைய ஆதாரங்களையே அங்கேயும் சமர்பிப்பார்கள். இதனால், அவர்களின் தண்டனை குறைய வாய்ப்பே இல்லை. நிச்சயம் அங்கேயும் அவர்களின் தண்டனை உறுதி செய்யப்படும். இந்த தீர்ப்பு வரும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். இதுகுறித்து நான் நேற்றே கவுசல்யாவிடம் பேசினேன். அவரை உறுதியாக இருக்கும்படி கூறியுள்ளேன். நிச்சயம் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேல் முறையீடு செய்வோம். இந்த தண்டனை தவறு செய்பவர்களுக்கு நிச்சயம் பயத்தை ஏற்படும். இந்தயாவிலேயே கவுசல்யாவைப் போன்று உறுதியான பெண்ணை பார்க்க முடியாது. குற்றவாளிகள் தன் பெற்றோர்கள் என தெரிந்தும், அவர்களுக்கு தண்டனை வாங்க வேண்டும் என நினைத்தது தான் இந்த தண்டனை கிடைப்பதற்கு காரணம்.

வள்ளி நாயகம் – ஓய்வு பெற்ற நீதிபதி

இதற்கு முன்னதாக இதுபோன்று இரட்டை தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டதில்லை. காலம் மாறும் போதும் சட்டங்களும் மாறுகிறது. இதுபோன்று இரட்டை தூக்கு தண்டனை கொடுப்பதற்கு சட்டத்தில் தடை ஏதும் இல்லை.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sankar murder case verdict political leaders talk

Next Story
“விடுதலையான 3 பேருக்கும் தண்டனை கிடைக்க பெறும்வரை என் சட்ட போராட்டம் தொடரும்”: கௌசல்யா உறுதிudumalaipettai shankar case judgement
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com