டிடிவி தினகரன் கட்சியை கைப்பற்ற முயற்சி செய்ததால் தான் அவர் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார் என குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு அதிமுக-வில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் சசிகலா அணி, ஓ பன்னீர் செல்வம் அணியினர் இரண்டாக பிளவுபட்ட அதிமுக மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறிவந்தது. இந்த நிலையில், தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, ஓ பன்னீர் செல்வம் தலைமையிலான அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என பிளவுபட்டுள்ளது.
டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஓரம் கட்ட எடப்பாடி அணி முயற்சித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த தீர்மானங்கள் செல்லாது என்று கூலாக தெரிவிக்கிறார் டிடிவி தினகரன். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணியினரை தனது விமர்சனங்களால் விளாசினார்.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வைக்க வேண்டும் என்றும், அப்பாது தான் உண்மை நிலை வெளிப்படும் என்றும் டிடிவி தினகரனே கேட்டுக்கொண்டார். ஓ பன்னீர் செல்வத்தின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றானது இந்த கோரிக்கை. சசிகலா தான் ஜெயலலிதாவை ஏதோ செய்துவிட்டார் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றவர்களுக்கு, டிடிவி தினகரனின் இந்த பேச்சு பேரிடியாக இருந்திருக்கலாம்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் வைத்து குன்னம் தொகுதி எம்.எல் ஏ. ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: அதிமுக அரசை மிரட்டும் வகையில் செயல்பட்டு வரும் டிடிவி தினகரன், ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில் உள்ளார்.
மேலூர் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியபோது, என்னைபற்றி தவறான கருத்தை தெரிவித்திருக்கிறார். கட்சியை கைப்பற்ற முயன்றதால் தான் அவரை ஜெயலலிதா நீக்கினார். அதிமுக- வின் தொண்டராக கூட இல்லாத டிடிவி தினகரன், கட்சிக்காக எத்தனை முறை சிறை சென்றீர்கள் என்பதை அடுத்து வரும் கூட்டத்தின்போது தெரியப்படுத்த வேண்டும்.
டிடிவி தினகரன் வாரிசு அரசியல் செய்து வருகிறார். சசிகலா மற்றும் டிடிவி குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு செல்ல வேண்டி நிலை ஏற்பட்டது. மேலும், ஜெயலலிதாவை இமயம் போல் காக்கவில்லை என்பது தான், அவரது மரணத்திற்கு காரணம். முன்னதாக, தலைமைக் கழகத்தில் இருந்து டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்தபோது, தினகரனை சந்திக்க கூடாது என்று கூறிவந்ததே திவாகரன் தான் என்று கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் குறித்து அவர் கூறும்போது, கமல்ஹாசன் ஒரு ட்விட்டர் அரசியல் வாதி. அரசியலுக்கு வரட்டும் அப்போது பார்க்கலாம் என்றார்.