அதிமுகவில் எந்த நேரம் புயல் வீசுமோ என்ற அளவுக்கு நிலைமை இருக்கிறது. அதே நேரத்தில் எந்த புயலும் வீசாது என்று விட்டேத்தியாக விட்டுவிடும் நிலையும் உள்ளது. இதற்கு காரணம், அதிமுகவில் இடையே நடந்து வரும் பணிப்போர்தான் காரணம். அதே நேரத்தில் எங்களுக்கு இடையே பணிப்போரும் இல்லை வெயில்போரும் இல்லை என்று இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக்கொள்வதுதான் முக்கிய காரணம். அதே நேரத்தில், மற்றொருபுறம் சசிகலா விரைவில் வருவேன் கட்சியைக் கைப்பற்றுவேன் என்று தினம் ஒரு ஆடியோ வெளியிட்டு அதிமுகவின் இரட்டைத் தலைமைகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தமும் சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பும் பெரும் தடையாகிப் போனது. அதற்குப் பிறகு, முதலமைச்சராக பதவியேற்ற ஈ.பி.எஸ் சாமர்த்தியமாக ஓ.பி.எஸ்-ஐ இணைத்துக்கொண்டு சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார். 4 ஆண்டுகளில் முதலமைச்சராக தன்னை நிரூபித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அதிமுகவை பலமான எதிர்க்கட்சியாக அமர்த்தியுள்ளார். ஓ.பி.எஸ் அளித்த போட்டியைத் தாண்டி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவிக் தனது பிடியை மேலும் இறுக்கமாக்கியுள்ளார். ஒ.பி.எஸ்-ஐ முழுவதுமாக நிராகரிக்காமல் ஈ.பி.எஸ் தனது இடத்தை உறுதி செய்டுகொண்டு அவருடன் நட்பும் முரணும் சேர்ந்த ஒரு அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலின் போது, 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தேர்தலில் அதிமுகவுக்கு சவாலாக இருப்பார். அதிமுகவைக் கைப்பற்ற முயற்சி மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தான் தற்காலிகமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாகக் அறிவித்தார். சசிகலாவின் அறிவிப்பு அவருடைய அக்கா மகன் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளித்தது. சசிகலா இனி அரசியலுக்கு வரமாட்டார். அவருடைய அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நினைத்தவர்களுக்கு கடந்த சில வராங்களாக அவர் அதிமுக அமமுக தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோவை வெளியிட்டு அதிமுக தலைமைகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
சசிகலா வெளியிட்ட ஆடியோக்களில், “ நல்லா இருக்கீங்களா, நான் நன்றாக இருக்கிறேன். ஒன்றும் கவலைப் பாடாதீங்க… கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம்… கொரோனா முடிந்த பின் நிச்சயம் நான் வருவேன். கவனமாக இருங்க… ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தக் கட்சி வீணாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் நிச்சயம் சீக்கிரம் வந்து விடுவேன். அவர்கள் சண்டைப் போடுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. கொரோனா தாக்கம் கொஞ்சம் குறைந்ததும் விரைவில் வந்து விடுவேன். தைரியமாக இருங்கள்…” இவ்வாறு தான் வெளியிட்ட ஆடியோக்களில் பேசி உள்ளார்.
சசிகலா தனது அரசியல் வருகையையும் அதிமுகவைக் கைப்பற்ற அதிமுக மதிமுக தொண்டர்களிடம் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலாவிடம் பேசிய நிர்வாகிகள் அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்தவர்கள் என்று ஊடகங்கள் அவர்களிடம் பேசி அவர்களின் கருத்துகளையும் வெளியிட்டன.
சசிகலா அதிமுக தொண்டர்களிடம் போனில் பேசிய ஆடியோ வெளியானதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில்தான், கடந்த வாரம், அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்ளவில்லை.
ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு ஊடகங்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் சசிகலா அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் பேசிய ஆடியோ பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் “சசிகலா அமமுக தொண்டர்களுடன் பேசியுள்ளார். அவர் எங்கே அதிமுக தொண்டர்களுடன் பேசினார்… எங்கே ஆதாரம் சொல்லுங்கள், சிலர் குழப்பத்தை விளைவிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது.” என்று என்று கூறினார். மேலும், சசிகலா அதிமுகவில் இல்லை. அதனால், அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்று கூரினார். அதே போல, ஓ.பி.எஸ் உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார்.
அடுத்த நாள், எடப்பாடி பழனிசாமி ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார் என்று செய்திகள் வெளியானது.
அதே போல, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சசிகலா அமமுக தொண்டர்களுடன் தான் பேசியதாகக் கூறினார். அவர் அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை என்று கூறினார்.
இந்த சூழ்நிலையில்தான், சசிகலா நேற்று (ஜூன் 7) மீண்டும் ஒரு ஆடியோவை வெளியிட்டார்.
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை இணை செயலாளர் ராஜேஷ் சிங்குடன் பேசிய ஆடியோவை வெளியாகியுள்ளது. அதில், கொரோனா தாக்கம் குறைந்தவுடன் நிச்சயம் தொண்டர்களை சந்திப்பேன் என்று கூறினார். இது சசிகலா தொண்டர்களிடம் பேசும் 10வது ஆடியோ ஆகும். இப்படி சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது.
எடப்பாடி பழனிசாமியும் கே.பி.முனுசாமியும் சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை என்று கூறிய நிலையில், அவர் நான் அதிமுக தொண்டர்களுடன்தான் பேசுகிறேன் என்று இ.பி.எஸ்-க்கு மெசேஜ் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் சசிகலா அதிமுகவை நோக்கிய தனது நடவடிக்கைகளை தீவிரமாக்கிவிட்டார் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.