சிறையில் சிறப்பு சலுகைகளுக்காக சசிகலா தரப்பினர் லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டிஐஜி ரூபா மவுட்கில்-க்கு கர்நாடக மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
ஜெயலலிதா காலமானதால் அவரை வழக்கின் தண்டனையில் இருந்து விடுவித்தும், மற்ற மூன்று பேருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ரூபா மவுட்கில், "கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு ரூ.1 கோடியும்" சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பெங்களூரு மத்திய சிறையில் நடந்த விதிமீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
மேலும், துறை சார்ந்த தகவல்களை உயர் அதிகாரியிடம் தெரிவிக்காமல், தகவலை ஊடகங்களில் ரூபா கசிய விட்டுள்ளார். காவல்துறை விதிமுறைகளை மீறி அவர் பேட்டி அளித்து வருகிறார். எனவே இது குறித்து விளக்கம் கேட்டு டிஐஜி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சித்தராமையா தெரிவித்தார்.
இதனிடையே, "எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்" என சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார்.
கிரண்பேடி வாழ்த்து:
ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "நாட்டுக்கு நீங்கள் தேவை. இளைய தலைமுறையினரை, உங்கள் செயல் ஊக்குவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.
கிரண்பேடிக்கு நன்றி தெரிவித்து பதில் டுவீட் செய்துள்ள ரூபா, "உங்களின் ஆதரவு வார்த்தை, நூறு யானைகளின் வலிமையை பெறுவதற்கு சமம்" என்று பதிவிட்டுள்ளார்.