அன்பரசன் ஞானமணி
சசிகலா இல்ல திருமண விழா ஒன்று யாரும் எதிர்பாரா சில அதிர்ச்சியான நிகழ்வுகளை பதிவு செய்ய காத்திருக்கிறது. அதுகுறித்த எக்ஸ்க்ளூஸிவ் செய்தி இது. இன்றைய அரசியல் சூழலில், சிறையில் இருந்து விரைவில் வெளிவரவுள்ள சசிகலாவின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக சசிகலா இன்னமும் நீடிப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் உறுதியாக சொல்கின்றனர்.
எது எப்படியோ, அவரது என்ட்ரி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதே பெரும்பாலானோரின் வாதமாக உள்ளது. இந்த நிலையில், ஒரு முக்கியமான தகவல் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்துக்கு கிடைத்திருக்கிறது.
சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திருமணம், வரும் மார்ச் 5ம் தேதி மன்னார்குடியில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. சசிகலாவின் உறவினர் வி பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீயை மணமுடிக்கிறார் ஜெயானந்த்.
இந்த திருமணத்திற்கு சசிகலா குடும்பத்தினரைச் சேர்ந்தோர் செல்லப் போவதில்லை என்று நமக்கு எக்ஸ்க்ளூஸிவாக தகவல் கிடைத்திருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1556-290x300.jpg)
அதாவது, சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா அவரது தம்பியும், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமன் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினர் ஜெயானந்த திருமணத்திற்கு செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1558-268x300.jpg)
அதேபோல் டிடிவி தினகரனும், ஜெயானந்த் திருமணத்திற்கு செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அவர் செல்லாமல் இருப்பதற்கு காரணம் வேறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவாகரன், குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா?
குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அரசியல் ரீதியாக நாம் பார்த்தோமெனில், சசிகலா குடும்பத்தில் இருந்து அவரது சகோதரர் திவாகரன் ஒதுக்கப்படுகிறார் என்பதை தெளிவாக நாம் காண முடிகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1560-300x184.jpg)
அதிமுகவை இ.பி.எஸ். , ஓ.பி.எஸ் வழிநடத்திக் கொண்டிருக்க, தனிக்கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுடன் முட்டிக் கொண்ட திவாகரன், மன்னார்குடியில் அம்மா அணி செயல்படுவதாக கூறி அதற்கான அலுவலகத்தை சசிகலா படத்துடன் திறந்தார். இதையடுத்து, 'தன்னை உடன் பிறந்த சகோதரி என அழைக்கக்கூடாது, தனது பெயரை பயன்படுத்த கூடாது' என வழக்கறிஞர் மூலம் சசிகலா நோட்டீஸ் அனுப்பினார்.
இதனைத்தொடர்ந்து, அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கிய திவாகரன், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இதனால், திவாகரனுக்கும் சசிகலா குடும்பத்திற்குமான பிணக்கம் அதிகரித்துக் கொண்டே செல்ல, இப்போது அவரது மகன் திருமணத்தில் வந்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற திமுக தஞ்சாவூர் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட திவாகரன், "தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்" என்று பகிரங்கமாவே அறிவிக்க, 'என்னப்பா இப்படியெல்லாம் பேசுறாரு' என்று ரத்தத்தின் ரத்தங்கள் முணுமுணுத்ததை நம்மால் கேட்க முடிந்தது.
இவ்வாறாக, சசிகலா குடும்பத்தை விட்டு விலகியே சென்றுக் கொண்டிருக்கும் திவாகரனுடைய மகன் ஜெயானந்த் திருமணத்தை, நெருங்கிய சொந்தங்களே புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இதுநாள் வரை அரசல் புரசலாக இருந்து வந்த சசிகலா தரப்பு - திவாகரன் மோதல், இப்போது நேரடி குடும்ப மோதலாக வெளியுலகத்திற்கு வருகிறது. இந்த புறக்கணிப்பு, திவாகரனை முற்றிலும் அரசியல் பாதையில் இருந்து அகற்றுமா அல்லது, 'அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல்' என்ற ஃபார்முலா கொண்ட சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, நிலைமை மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!.