Advertisment

பெங்களூரு சிறையில் இருந்து தி.நகர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சசிகலா!

சசிகலா சாலை மார்க்கமாகவே சென்னை வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெங்களூரு சிறையில் இருந்து தி.நகர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சசிகலா!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, தனது கணவர் நடராஜனுக்கு நடந்துள்ள கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையை காரணம் காட்டி, சிறைத்துறையிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பெங்களூரு சிறைத்துறை, பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக சென்னை காவல்துறையிடம் மின்னஞ்சல் மூலம் கருத்து கேட்டிருந்தது. இதற்கு, சென்னை காவல்துறையினரும், நிபந்தனையுடன் கூடிய பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்பினர்.

Advertisment

தமிழக போலீஸாரின் நிபந்தனைகள் குறித்து விவாதித்த பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவுக்கு ஐந்து நாட்கள் பரோல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, காரிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்தார். சிறையில் இருந்து சசிகலாவை தினகரன் உடனிருந்து அழைத்து வந்தார்.

இரவு 09:45 - தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிற்கு சசிகலா வந்தடைந்தார். வழிநெடுகிலும் நின்றிருந்த எண்ணற்ற தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

மாலை 05:20 - வேலூர் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியை வந்தடைந்தது சசிகலாவின் வாகனம். அப்போது சுங்கச்சாவடியில் காத்திருந்த தொண்டர்கள் சசிகாவின் காருக்கு மலர் தூவினர். தொண்டர்களின் வாகனம், சசிகலாவின் வாகனத்தை பின்தொடர்ந்து  அணிவகுத்துச் சென்றுக் கொண்டிருக்கின்றன.

மதியம் 03:25 - சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் சசிகலாவை, அமைச்சர்கள் யாரும் சென்று சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதியம் 03:15 - பெங்களூருவில் உள்ள தேவனஹல்லி எனும் கிராமத்தில் தான் விமான நிலையம் உள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அங்கு செல்வதற்கான தொலைவு 50 கி.மீ ஆகும். அங்கு செல்ல குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும் என தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில், சசிகலா சாலை மார்க்கமாகவே சென்னை வரவுள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதியம் 02:58 - 233 நாட்களுக்குப் பிறகு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஐந்து நாள் பரோலில் சசிகலா வெளியே வந்தார்.  சிறை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி, உடனடியாக சிறையில் இருந்து சசிகலா வெளியேறினார்.

மதியம் 02:05 - இன்னும் சற்று நேரத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர இருக்கிறார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 04:05 மணிக்கும், 5 மணிக்கும் சென்னைக்கு விமானம் செல்ல இருக்கிறது. இந்த இரண்டு விமானத்திலும் சசிகலாவிற்கு டிக்கெட் போடப்பட்டுள்ளது. எந்த விமானத்தில் செல்வார் என்பது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போதே தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

மதியம் 01:35 - சசிகலாவின் பரோல் மொத்தம் ஐந்து நாட்கள். நாளை முதல் தான் இது கணக்கிடப்படுகிறது. அதாவது, 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

publive-image

மதியம் 01:25 - தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்தின் முன்பு தொண்டர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். இதனால், சசிகலா இங்கு தான் தங்கப் போகிறார் என்பது உறுதியாகிறது.

publive-image

மதியம் 01:15 - சிறையில் இருந்து சசிகலா வெளிவந்த பின்னர், அவர் விமானம் மூலமாக சென்னை வருவார் என தெரிகிறது. அதேசமயம் சாலை மார்க்கமாக அவர் வருவதற்கும் வாய்ப்புண்டு என கூறப்படுகிறது. சென்னையில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் சசிகலா தங்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

publive-image

மதியம் 01:10 - ஊடகங்களை நிச்சயம் சந்திக்கக்கூடாது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது போன்ற நிபந்தனைகள் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த நடைமுறை விளக்கம் தற்போது சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதியம் 12:57 - சசிகலாவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்.

மதியம் 12:50 - வி.கே சசிகலாவுக்கு ஐந்து நாள் பரோல் அளித்தது கர்நாடக சிறைத்துறை.

மதியம் 12:40 - தினகரன், இளவரசி மகன் விவேக், அவரது மனைவி கீர்த்தனா, ராஜராஜன் ஆகியோர் சசிகலாவை சிறையில் சந்தித்தனர்.

மதியம் 12:20 - பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை  வளாகத்திற்கு டிடிவி தினகரன் வந்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment