scorecardresearch

ஜெயலலிதாவை கடைசி 65 நாட்கள் சசிகலாவே பார்க்கவில்லை: டிடிவி தினகரன் புதிய தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, கடைசி 65 நாட்களாக சசிகலா அவரை பார்க்கவில்லை என டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, கடைசி 65 நாட்களாக சசிகலா அவரை பார்க்கவில்லை என டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை” என கடிதம் அளித்துள்ளனர். கடிதம் அளித்த கையுடன் புதுவை சென்ற அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர். பின்னர், அங்கிருந்து இடம் மாறி தற்போது கர்நாடக மாநிலம் குடகில் தங்கியுள்ளனர்.

இதனிடையே, முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ஜக்கையன் நீங்கலாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் திடீரென அதிரடியாக உத்தரவிட்டார். டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேசமயம், தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குடகில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்களை சந்திக்க டிடிவி தினகரன் அங்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அம்மா அணி என்றால் அது நாங்கள் தான். புரட்சித் தலைவி அம்மா அணியின் பொதுக் குழுவை வேண்டுமானால் அவர்கள் கூட்டியிருக்கலாம். விரைவில் அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை கூட்டுவேன். பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளராக என்னையும் அங்கீகரித்தது இவர்கள் தான் என்றார்.

மேலும், பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மாறிமாறி பேசி வருகிறார் திண்டுக்கல் சீனிவாசன். சேகர் ரெட்டி வழக்குக்கு பயந்தே முதல்வர் எங்களை எதிர்க்கிறார். மூன்றாம் தரப் பேச்சாளர் போன்று பேசும் முதல்வருக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அவர் குறித்து கருத்து கூறி எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள நான் விரும்பவில்லை என்றும் தினகரன் அப்போது தெரிவித்தார்.

அதேபோல், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளன. முறையான விசாரணை நடைபெறும் போது அதனை சசிகலாவின் ஒப்புதலோடு வெளியிடுவோம் என குறிப்பிட்ட டிடிவி தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரை அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் சசிகலா பார்க்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருந்தார். அவரை தவிர வேறு யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கடைசி 65 நாட்களாக ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள், அமைச்சர்கள், அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் என அனைவரும் கூறி வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அவரது மறைவையடுத்து, தர்மயுத்ததை தொடங்கிய பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை தேவை என்பது தான். மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி வருகிறது என்று கூறிய பன்னீர்செல்வம் தரப்பினர் திடீரென அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவித்த விஷயம் சர்ச்சையை கிளப்பியது. எனினும் அவரது கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறி இரு அணிகளும் கடந்த மாதம் இணைந்தன. அதன்பின்னர், சசிகாலா தான் எங்களுக்கு எல்லாமே என்று கூறி வந்த இபிஎஸ் அணியினர் உள்பட அனைவரும் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா தான் காரணம் என கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sasikala had not seen jayalalithaa for last 65 days ttv dhinakaran