வி.ஐ.பி. அந்தஸ்தை இழந்தார்: சிறையில் சாதாரண கைதியாக நடத்தப்படும் சசிகலா

சசிகலாவின் விருப்பப்படி உணவுகளை சமைக்க சிறையில் உள்ள பெண்மணியும் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்காக சசிகலா தரப்பில் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவிற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் எழுந்த புகாரையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் நீக்கப்பட்டு, சாதாரண கைதியாகவே நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக, காலை உணவாக அவரது விருப்பப்படி இட்லி அல்லது தோசை சாப்பிட்டு வந்த நிலையில், புகாருக்குப் பின் சக கைதிகளைப் போலவே சசிகலா எலுமிச்சை சாதம் மற்றும் டீ உட்கொண்டதாக கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையின் உணவுப்பட்டியலின் படி, காலை உணவு எலுமிச்சை சாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதியத்தில், சசிகலா கேட்டுக்கொண்டதன்படி, தயிர் சாதம் மற்றும் ராகி ரொட்டி உண்டார் என கூறப்படுகிறது. டி.ஐ.ஜி. ரூபாவின் முக்கிய குற்றச்சாட்டு சசிகலாவிற்கு சிறப்பு சமையலறை மற்றும் அவருக்கு சமைத்துத் தருவதற்காக சிறையில் உள்ள பெண்மணி ஒருவரை நியமித்தது. அந்த சலுகை நீக்கப்பட்டு சசிகலாவிற்கு மற்ற கைதிகளைப் போலவே உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் மதிய வேளையில் அசைவ உணவுகளையே சசிகலா சாப்பிடுவார். ஆனால், தற்போது ராகி ரொட்டி மற்றும் தயிர் சாதம் சாப்பிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் மற்ற பெண் கைதிகள் அணியும் வெள்ளை சேலை சசிகலா அணிவதில்லை. அவருடைய ஆடைகளையே அவர் அணிந்து வருகிறார். சிறை விதிகளின்படி, ஏழு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கே அத்தகைய சிறை உடை வழங்கப்படும். அதனால், சிறை உடை அணிவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி, சசிகலா எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்கியிருக்கிறார். பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் இதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழும் பழக்கத்தை உடையவர் சசிகலா. 10 மணி வரை சிறை நூலகம், அங்குள்ள மற்ற இடங்களுக்கு செல்லுதல், பத்து மணிக்குப் பிறகு பார்வையாளர்களை சந்தித்தல் ஆகியவையே அவரது தினசரி நடைமுறைகளாக இருந்துவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், லஞ்ச புகாருக்குப் பின் சசிகலா தன் அறையைவிட்டு வெளியே வராமல் சக கைதி இளவரசியுடன் பொழுதைக் கழித்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சிறையில் தொலைக்காட்சிகளின் கேபிள் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்துவிட்டதால், அவர் இனி தொலைக்காட்சியையும் பார்க்க முடியாது.

அதுதவிர, வசதியான கட்டில், மெத்தை, மின்விசிறி, வாட்டர் ஹீட்டர், மினரல் தண்ணீர் கேன்கள், காஃபி தயாரிக்கும் உபகரணாம், எல்.ஈ.டி. தொலைக்காட்சி ஆகியவையும் சசிகலாவிற்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது, அவருக்கு வழங்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சமையலறை மற்றும் உபகரணங்கள் நீக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், சசிகலாவின் விருப்பப்படி உணவுகளை சமைக்க சிறையில் உள்ள பெண்மணியும் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சலுகைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close