Advertisment

ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?

சசிகலா, திங்கள்கிழமை மாலை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்த்தின் மனைவி லதாவும் உடன் இருந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sasikala meets Rajinikanth, Sasikala visits Rajinikanthat, Sasikala visits Rajinikanth at his residence, chennai, ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு, சசிகலா, ரஜினிகாந்த், sasikala, rajinikanth, tamil politics, latha rajinikanth

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். சசிகலா திடீரென ரஜினிகாந்த்தை சந்தித்தது ஏன் என்று தமிழக அரசியலில் விவாதமாகியுள்ளது.

Advertisment

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிவடைந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலையானார். பெங்களூருவில் இருந்து சென்னை வரை அவர் நீண்ட வரவேற்பைப் பெற்று வருகை தந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற களம் இறங்குவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் பலரும் தன்னை மீண்டும் அரசியலுக்கு அழைப்பதாகவும் சசிகலா தொண்டர்களுடன் போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனாலும், அதிமுகவில் பெரிய சலசலப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலாவுக்கு பதிலடி கொடுத்தனர்.

அதிமுகவின் பொன்விழாவையொட்டி, சசிகலா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக கொடி ஏற்றி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தொண்டர்களை நேரில் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார். ஆனால், இவை எல்லாம் ஊடகங்களில் ஓரிரு நாள் விவாதமாக இருந்ததே தவிர அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதனிடையே, அதிமுக உள்கட்சி தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செலவமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலுக்கு வருவதாகக் கூறிய நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பினார்.

இதையடுத்து, அவருக்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் விருது ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில்தான், அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ள சசிகலா, திங்கள்கிழமை மாலை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்த்தின் மனைவி லதாவும் உடன் இருந்துள்ளார்.

சசிகலா நடிகர் ரஜினிகாந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் அவருடைய உடல்நிலை குறித்து நலம் விசாரித்ததோடு தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்து சசிகலா தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “சசிகலா நேற்று (டிசம்பர் 06) மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்தார்கள்.

ரஜினிகாந்த் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து நேரில் சென்று சந்தித்து அவருடைய உடல்நலனைப் பற்றியும் கேட்டு அறிந்தார்.

மேலும், ரஜினிகாந்த் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் சசிகலா தெரிவித்துக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்திருப்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்திருந்தாலும் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Superstar Rajinikanth Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment