சசிகலாவின் ஐந்து நாள் பரோல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா புறப்பட்டுள்ளார்.
சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மருத்துவமனையில் இருந்தே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், நடராஜனை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள சசிகலா, சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை தினமும் சந்தித்து, அவருடைய உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்து வந்தார்.
இந்தநிலையில், 5-வது நாளாக நேற்றும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் இருந்து சசிகலா புறப்பட்டுச் சென்றார். ஆனால், மாலை மீண்டும் வீடு திரும்பும் போது அவர் மிகவும் சோகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளாலும், தினகரனின் செயல்பாடுகளாலும் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பல அமைச்சர்கள் தினகரனின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்களாம். அதேசமயம், கணவர் நடராஜனும் மருத்துவமனையில் இருப்பதால், சசிகலா இறுக்கமான மனநிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.
சசிகலாவின் ஐந்து நாள் பரோல் நேற்றுடன் (அக்.11) முடிந்தது. இன்று (அக்.12) மாலை 5 மணிக்குள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தி.நகர் இல்லத்தில் இருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன் இளவரசியின் மகன் விவேக், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோரும் உடன் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.