பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி. தீர்ப்பளித்தார்.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. 2ஜி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ.223.55 கோடி மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும். மேலும், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது என்று புகார் கூறப்பட்டிருந்தது. அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா, 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆனதற்காக கனிமொழிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணபிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஒரு பெண்ணாக , ஒரு தாயாக, திருமதி கனிமொழி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை கிருஷ்ணபிரியா பதிவிட்டுள்ளார்.
2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசாவும் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், கனிமொழிக்கு மட்டும் 'ஒரு பெண்ணாக , ஒரு தாயாக எனது வாழ்த்துகள்' என கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.