நாள்தோறும் பரபரப்புக்குள்ளாகி வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவும், டிஐஜி ரூபாவும் நேற்று அடுத்தடுத்து திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக வெளியான தகவலால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ரூபா மவுட்கில், "கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு ரூ.1 கோடியும்" சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், சிறைக்கு விசாரணை அதிகாரிகள் எந்த நேரமும் ஆய்வுக்கு வரலாம். சிறையில் எந்த தவறுகளும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறையில் இயங்காமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என அவர் கிருஷ்ணகுமாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த ஆய்வின் போது சில முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதனையடுத்து, சிறைக்கு வந்த ரூபாவும் சிறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ரூபாவை தடுத்து நிறுத்தியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைக்கு சத்யநாராயண ராவ் வந்து சென்றதால், அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய ரூபா வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவும், அவரை தொடர்ந்து டிஐஜி ரூபாவும் அடுத்தடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.