தமிழக அரசியலில் நீங்கமுடியாத சகாப்தமாக விளங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரை போலவே அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமும் தமிழக அரசியலில் நீங்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து வெற்றி பெற்று விடுதலையானார். ஆனால் அவரது விடுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தீர்ப்பு வருவதற்குள் அவர் இறந்துவிட்டார்.
இதனையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது வீட்டில் வாழ்ந்து வந்த சசிகலாவும் சிறை சென்றுவிட்ட நிலையில், இந்த நான்கு ஆண்டுகளில் ஜெயலலிதா வசித்த பங்களா அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், கட்சியும், ஆட்சியும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வசம் சென்றது. இதனால் சசிகலா விடுதலை ஆனபின் எங்கு தங்குவார் என கேள்வி எழுந்தது.
இந்த கேள்விக்கு பதிலாக தற்போது சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ள நிலையில், போயஸ் கார்டனிலேயே ஒரு பங்களா அவருக்கு தயாராகி விட்டது. ஆனால் அண்மையில் வருமான வரித்துறை சசிகலாவின் சொத்துக்களை முடக்கியது. இந்த பங்களாவும் அதில் சிக்கிக்கொண்டது. ஆனால் சட்ட ரீதியாக முடக்கத்தை நீக்கும் வரையில் அந்த சொத்துக்களை அனுபவித்து வரலாம் என்ற நிலையில், இந்த பங்களவின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 25ஆம் தேதி இந்த பங்களாவுக்கு பால் காய்ச்சும் விழா நடைபெறவுள்ளதாக அமமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள். இந்நிலையில் விடுதலையான அன்று இரவே சசிகலா சென்னைக்கு வந்து ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் கார்டன் இல்லத்துக்கு செல்ல இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால் மீண்டும் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் பேசுபொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"