சசிகலா தொண்டர்களிடம் கட்சியை சரி செய்துவிடலாம் என்று பேசும் ஆடியோ வெளியாகிறது ஒரு பக்கம். மறு பக்கம் ஓ.பன்னீர் செல்வம் கட்சி லெட்டர்பேடில் தனியாக அறிக்கை விடுகிறார். ஈ.பி.எஸ் ஒற்றைத் தலைமையை நோக்கி காய்களை நகர்த்துகிறார். இவையெல்லாம் அதிமுகவில் 2வது எரிமலை வெடிப்பதற்கான புகைச்சல் தொடங்கியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதாவின் நிழல் பெண்மணியாக போயஸ் தொட்டத்தில் அவருடனேயே இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆட்சியையும் கட்சியியும் கைப்பற்ற முயன்றபோது ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தி தடுத்தார். கூவத்தூர் களேபரங்களைத் தொடர்ந்து சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி 2017-ல் முதல்வரானார். ஜெயலலிதாவின் அரசியல் மாணவன் என்பதை நிரூபிக்கும் விதமாக சாமர்த்தியமாக ஆட்சியையும் கைப்பற்ற திட்டமிட்ட ஈ.பி.எஸ், வெளியே சென்ற ஓ.பி.எஸ் உடன் இணைந்தார். சசிகலா, டிடிவி உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கினார். கட்சியை மீட்டு தன்வசம் வைத்துக்கொண்டார். இப்படியாக முதல் எரிமலை வெடித்து முடித்தது.
இதனைத் தொடர்ந்து, கட்சியில் இரட்டைத் தலைமை, ஆட்சியிலும் இரட்டை முதல்வர்கள் என வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்தார்கள். ஆனால், எல்லாவற்றிலும் ஈ.பி.எஸ் கையே மேலோங்கி இருந்தது. எல்லாவற்றிலும் பின்னிறுக்கைக்கு சென்றாலும், ஓ.பி.எஸ் கட்சியில் தனது இடம் முதலிடம் என்பதை வலியுறுத்த இன்றுவரை தவறியதே இல்லை.
பெரிய எதிர்ப்புகள் இல்லாமல், ஒரு ஆக்டிவ்வான முதல்வராக தன்னை நிரூபித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தனது போட்டியாளர் ஓ.பி.எஸ் முட்டுக்கட்டைகளைத் தாண்டி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவராகவும் தனது இடத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டுள்ளார். தேர்தலின்போது விடுதலையான சசிகலா, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அவர் ஓய்வு எடுப்பதாகக் கூறினார். அப்போது, பாஜகதான் சசிகலாவை சரிகட்டியதாக பேசப்பட்டது. சசிகலாவின் சகோதரி மகன், அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தலில் சசிகலாவின் ஆதரவு இன்றி படுதோல்வி அடைந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஒருவேளை சசிகலா களம் இறங்கியிருந்தாலும், அவருடைய செல்வாக்கு பெரிதாக எடுபட்டிருக்காது. அவரும் தோல்வியைத்தான் தழுவியிருப்பார். அதனால்தான் அவர் ஒதுங்கிவிட்டார் என்றும் பேசப்பட்டது. தேர்தலில், தோல்வியைத் தழுவி தலைமைக்காக ஈபி.எஸ், ஓ.பி.எஸ் போட்டி போட்டுக்கொண்டிருக்கும்போது, அதிமுகவை தொடர்ந்து கவனித்துவரும் சசிகலா கட்சியை கைப்பற்ற வியூகம் வகுக்கிறார். ஆடியோக்களை கசியவிட்டு அதனை தெரியப்படுத்துகிறார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே போட்டியிருந்தாலும் அவர்கள் இருவருமே ஒரு விஷயத்தில் ஒத்த கருத்துடன் இருக்கிறார்கள். அது சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் விடக்கூடாது. மற்றொன்று அதிமுகவை எந்த சூழலிலும் உடைப்பதற்கு வழி ஏற்படச் செய்யக்கூடாது என்பதுதான். ஏனென்றால், சசிகலா உள்ளே வந்தால் இவர்களுடைய செல்வாக்கு தானாக குறையும் என்பதுதான். அதனால்தான், தேர்தலில் சசிகலா ஆதரவாளர்களாக கருதப்பட்டவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே தனி அறிக்கை கட்சி எம்.எல்.ஏ.க்களை தனது ஆதரவாளர்களாக மாற்றுவது என்ற போட்டி புகைச்சல் நடந்துகொண்டிருக்க இதுதான் அதிமுகவில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் எடப்பாடி பழனிசாமி எப்படியும் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரங்கட்டிவிடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.
இந்த சூழலில்தான், சசிகலா அதிமுக நிர்வாகிகளை போனில் அழைத்து கட்சியை சரி செய்துவிடலாம் என்று பேசுகிறார். ஓ.பி.எஸ் தனி அறிக்கை விடுவது, ஆளும் திமுகவுக்கு கட்சி சார்பில் இருந்து கோரிக்கைகள் விடுவது, மெண்மையான விமர்சனம் செய்வது, கட்சியின் தலைமை என்று ஆவர்த்தனம் செய்வது என்று இருப்பது ஈ.பி.எஸ்-க்கு ஒரு நெருக்கடியாகவே தொடர்கிறது. இப்போது, இந்த சசிகலாவின் நெருக்கடியும் எழுந்துள்ளது. சசிகலா அதிமுகவிலும் அமமுகவிலும் மூத்த நிர்வாகிகளிடம் போனில் தொடர்புகொண்டு பேசி வருகிறாராம். சசிகலா நிர்வாகிகளிடம் பேசியதாக இதுவரை 2 ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. சசிகலாவின் அரசியல்
சசிகலா இனி அரசியலுக்கு வரமாட்டார், அவருடைய அரசியல் அத்தியாயம் முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு அவருடைய ஆடியோ பதிலாக வந்துள்ளது. ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா இருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை நெருக்கடிகளாக எழுந்திருக்கிறது. என்ன செய்தாலும், சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியில் எடப்பாடி பழனிசாமியை வெற்றிகொள்ள முடியாது என்கிறார்கள் அதிமுக வட்டாரங்கள். எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று விசாரித்தபோது, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடை உறுதி செய்ததன் மூலம், ஈ.பி.எஸ் வன்னியர்களின் நம்பிகையை பெற்றுவிட்டார். அதே போல, மேற்கு மாவட்டங்களில் தனது சமூகத்தின் செல்வாக்கு மூலம் யாராலும் எதிர்க்க முடியாத அளவுக்கு தனது கோட்டையாக நிறுவியுள்ளார். அதிமுக வெற்றி பெற்ற 65 இடங்களில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டும் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் ஈ.பி.எஸ் பக்கம் நிற்கிறார்கள். அதனால், ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவின் முயற்சி எடுபடாது என்கிறார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கட்சியில் சசிகலாவின் செல்வாக்காலும் அவர்களின் மன்னார்குடி குடுபத்தின் நடவடிக்கைகளாலும் அதிமுக ஒரு கட்டத்தில் தேவர் சாதி கட்சி என்ற அளவுக்கு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு தேவர் சமூகத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஜெயலலிதாவும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அரசு விழாவாக அறிவித்தார். 13 தங்க கவசங்களை நன்கொடையாக அளித்து தேவர் சமூக வாக்குகளை வாக்கு வங்கிகளாக தக்கவைத்துக்கொண்டார்.
சசிகலா, டிடிவி தினகரன் & மன்னார்குடி குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றும் வரை அதிமுகவில் தேவர் சமூகத்தின் ஆதிக்கம்தான் உள்ளது என்று அந்த சமூகத்தினரும் சசிகலாவும் ஓ.பி.எஸ்-ஸும் நம்பிக்கொண்டிருந்தார்கள். சசிகலா, டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டு, அவர்கள் மீண்டும் கட்சிக்குள் வரமுடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தியதோடு, ஓ.பி.எஸ் பின்னிறுக்கைக்கு செல்ல ஈ.பி.எஸ் எழுந்து நின்றபோதுதான், அதிமுகவில் கொங்கு கவுண்டர்கள் சமூக ஆதிக்கம், தேவர்கள் சமூகத்தை தாண்டி எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது துலங்கியது. இப்போது நடந்து முடிந்த தேர்தலிலும், ஈ.பி.எஸ் அதனை நிரூபித்துள்ளார். அதனால், ஓ.பி.எஸ், சசிகலா என்னதான் நெருக்கடி கொடுத்தாலும், ஈபிஎஸ் இடமிருந்து கட்சியை யாரும் பறிக்க முடியாது. சசிகலாவின் சக்ர வீயூகங்களை எடப்பாடி பழனிசாமி உடைத்துவிடுவார் என்கிறார்கள் பழனிசாமியின் ஆதரவாளர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“